137. | பசுபதியருளிய பகழிமுன்வரலும் விசயனுநறைவிரி மலர்கொடுபரவித் திசைதொறுமமர்புரி திறலுடைவடிவேல் அசுரர்தமுடலுக வடலுடன்விடவே. |
(இ-ள்.) பசுபதி அருளிய பகழி - சிவபிரான் கொடுத்தருளிய அந்த அஸ்திரம், முன் வரலும் - எதிரில் வந்த அளவில்,-(அதனை),விசயன்உம் - அருச்சுனனும், நறை விரி மலர்கொடு - தேனொழுகுகின்ற பூக்களினால், பரவி - அருச்சித்து, திசைதொறுஉம் - (தன்னைச்சுற்றிலும்) எல்லாத் திக்குக்களிலுமிருந்து, அமர் புரி, - போர் செய்கின்ற, திறல் உடை - வலிமையையுடைய, வடி வேல்-கூர்மையையுடைய வேலாயுதத்தையுடைய, அசுரர்தம் - அசுரர்களது, உடல் உக - உடல் அழியும்படி, அடலுடன் - வலிமையுடனே, விட - பிரயோகிக்க,-(எ-று.)-போய்ப்புக்கதுஎன்க. பசுபதி-ருஷபத்துக்குத் தலைவன்: அல்லது, உயிர்களுக்குத் தலைவன்;பசு என்னும் வடமொழி இப்பொருள்களையுணர்த்துதலை"பசு ஏறு சீவன் ஆவாம்"என்னும் நிகண்டினால்அறிக. 'பசுபதியருளிய பகழிமுன்வரலும்'என்றது அநுவாதம்;தொடர்ச்சியை விளக்க வந்தது. நறைவிரிதல்-வாசனைவீசுதலுமாம். (313) 138. | அக்கணைவிசையுடனகல்வெளிமிசைபோய் நக்கதுபிறையெயி றிளநிலவெழவே முக்கணுமழலுக முரணொடுமுடுகிப் புக்கதுதனுசர்த முடல்பொடிபடவே. |
(இ-ள்.) அ கணை- அந்த அஸ்திரம், விசையுடன் - வேகத்துடனே, அகல் வெளிமிசை-பரந்த ஆகாயத்திலே, போய்-சென்று, பிறை எயிறு இள நிலவு எழ-இளஞ்சந்திரன்போன்ற பற்களினின்றும் இளமையான நிலாப்போன்ற வெள்ளொளி தோன்றும்படி, நக்கது-சிரித்து, மு கண்உம் அழல் உக - (தனது) மூன்றுகண்களினின்றும் நெருப்புச் சிந்தும்படி, முரணொடு-வலிமையுடனே,தனுசர் தம் உடல் பொடிபட-அசுரர்களது உடம்பு தூளாம்படி, முடுகி புக்கது-உக்கிரமாய்ப் பிரவேசித்து: (எ-று.) எயிற்றுக்குப்பிறையுவமை, வளைவுக்கும்ஒளிக்கும் வெண்மைக்கு மென்க. சிரிக்குங் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது வெளித்தோன்றுதலால், 'நக்கதுபிறையெயிறிளநிலவெழவே'என்றார். முக்கணும் என்பதற்கு - மூன்றுமுகம்படைத்த அந்த அஸ்திரத்துக்கு ஒவ்வொரு முகத்திலும் மூன்றுகண்களிருந்தன என்க. முக்கணும், உம்- முற்றுப்பொருளது. (314) 139. | மாருதம்விசையுடன் வடவனல்கொளுவிக் கார்தொறுநிரைநிரை கடிகுவததுபோல் தேர்தொறுமமர்புரி யவுணர்கடேகத்து ஓரொருகணையொருநொடியினிலுறவே. |
|