பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்21

    மரவுரி - மரத்தினுடைய நார்ச்சீரை.  உரி-உரிக்கப்பட்டது:
தோல்:பட்டை. அருச்சுனன் அக்கினிபகவானுக்குக் காண்டவனத்தை
இரையாகக்கொடுத்த காலத்தில் அவ்வருச்சுனனுக்கு அக்கினியினால் நான்கு
வெள்ளைக் குதிரைகள் பூட்டியதொருதேரும், குரங்குக் கொடியும்,
காண்டீவமென்னும் வில்லும், அம்புகள் குறைதலில்லாத அக்ஷயதூணீரமும்,
தேவதத்தமென்னுஞ் சங்கமும், அளிக்கப்பட்டன வென்று அறிக.
ஸர்வேசுவரனாகிய ஸ்ரீமந்நாராயணனைப் புத்திரனாகப்பெற்ற தசரதனது
பாக்கியத்தின் மகிமையை நோக்கி, 'எல்லாப்புண்ணியங்களுக்கும் தானேயுரை
பெறு தசரதன்'
என்றார்.தசரதனென்பதற்கு-பத்துத் தேர்களையுடையவனென்று
பொருள்; பத்துத்திக்குகளிலும் தடையின்றிச் செல்லுந் தேருடையவ னென்பது
கருத்து: இந்திரனைச் சிறையிட்ட சம்பராசுரனோடு போர்செய்த பொழுது
அவன் ஓடிச்சென்ற இடங்களிலெல்லாந் தான் துரத்திக்கொண்டு சென்றதனால்,
இவனுக்குஇப்பெயர் விளங்கியது. இச்சொல்லுக்கு-தச-பட்சி, ரத-வாகனம் எனப்
பொருள்கொண்டால், கருடவாகனனான திருமாலுக்குப் பெயராம்; தெய்வப்
பெயரை மனிதர்க்கு இடுவது பரிசுத்திகர மென்கிற காரணத்தினால்,
இவ்வரசனுக்கு இப்பெயர் இட்டு வழங்கியதென்றுங் கொள்ளலாம். இராமன்
போன்றவ னென்பது, ஈற்றடியின் கருத்து.                          (29)

30.நெறியிருபுறத்துமூசி நுழையொணாநெருக்கமிக்க
செறிதருவனமுஞ்சிங்கஞ் சிந்துரஞ்செருச்செய்சாரல்
பொறைகளும்வெம்பிசாச பூதமோடியக்கர்யாரும்
உறைதருகுவடுநீங்கி யுத்தரமுடிவுகண்டான்.

    (இ-ள்.) நெறி இரு புறத்துஉம்-வழியின் இரண்டுபக்கங்களிலும், ஊசிநுழை
ஒணா - ஊசியும் நுழையக்கூடாதபடி, நெருக்கம் மிக்க-நெருக்கம் மிகுந்த,
செறிதரு வனம்உம் - அடர்த்தியான காடுகளையும், சிங்கம்- சிங்கங்களும்,
சிந்துரம் - யானைகளும், செரு செய்-போரைச் செய்கின்ற, சாரல் -
பக்கங்களையுடைய, பொறைகள்உம் - மலைகளையும், வெம் பிசாசம்
பூதமோடு - கொடிய பிசாசங்களும் பூதங்களும், இயக்கர் - யக்ஷர்களும்,
யார்உம் - மற்றைத்தேவகணங்களும், உறைதரு-வசிக்கப்பெற்ற, குவடுஉம் -
மலைச்சிகரங்களையும், நீங்கி-கடந்து,- உத்தரம் முடிவு - (பாரதவர்ஷத்தின்)
வடதிசை முடிவை, கண்டான்-பார்த்தான்; (எ - று.)

     உத்தரமுடிவு கண்டான் என்பதற்கு எழுவாய், கீழ்ச்செய்யுளில்
வந்துள்ள "தசரதன்றன்மகனலாதுவமை யில்லான்"என்பது.  பிசாசர்
முதலியோர்-பதினெட்டுத் தேவகணங்களுட்பட்டவர்.  புறத்து மூசி எனப்
பிரிந்து- பக்கங்களில்மொய்த்து என்றும் பொருள் கொள்ளலாம்.  செறிதரு,
தா - துணைவினை. செறி-செறிந்த, தரு - விருட்சங்களைக்கொண்டஎனின்,
தரு- வடசொல்.  பொறை-பூமியைப் பொறுப்பது: மலை: பூதரம் என்ற வட
சொல்லையுங் காண்க.                                        (30)