இதில்,அசுரரழிதலாகிய காரியத்தை முன்னும், வில்லின் தொழிலாகிய காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லியதனால், மிகையுயர்வுநவிற்சியணி. இதில், காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய முறைபிறழ்வு, காரியவிரைவைத் தெரிவிக்க வந்தது. மற்று-அசை. இடி- உவமையாகுபெயர். (331) 156. | ஆயதுநிகழ்ந்தபின்ன ரயனருள்வரத்தினாலே ஏயவாள்வலியின்மிக்க விரணியபுரத்துள்ளோரைத் தீயவெம்பகழியொன்றாற்செற்றனனிமைப்பின்முற்றும் மாயமோமனிதன்வில்லின் வன்மையோதெரிந்ததில்லை. |
(இ - ள்.) ஆயது நிகழ்ந்த பின்னர் - ஆகிய அச் செய்கை நடந்தபின்பு, அயன் அருள் வரத்தினால்ஏஏய - பிரமன் கொடுத்தருளிய வரத்தினாலேபொருந்திய, வாள் வலியின் மிக்க-ஆயுதபலத்தினால்மிகுந்த, இரணியபுரத்து உள்ளோரை-இரணியபுரத்திலுள்ள காலகேயர் அறுபதினாயிரவரை,தீய வெம் பகழி ஒன்றால்-மிகவுங்கொடிய அஸ்திரம் ஒன்றினால்,இமைப்பின் - நொடிப் பொழுதினுள்ளே, முற்றுஉம் - முழுதும், செற்றனன் - அழித்தான்:(அங்ஙனமழித்தது), மாயம்ஓ - மாயையினாலாகியதோ? மனிதன் வில்லின் வன்மைஓ - மனிதனாகிய அருச்சுனனது வலிய வில்லின் பலத்தாலாகியதோ? தெரிந்தது இல்லை- எனக்குத் தெரியவில்லை; (எ- று.) ஏய-ஏய்என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்: யகரவிடைநிலைபகுதிக்கும் விகுதிக்குமிடையிலே புணர்ந்து கெட்டது:இனி, இதனைச்செயவெனெச்சமாகக் கொண்டு, பொருந்தவெனவுரைத்து, மிக்க வென்பதனோடுஇயைத்தலுமாம். தீய வெம்-ஒருபொருட் பன்மொழி. இமைப்பு-ஒரு மனிதன் இயல்பாகக் கண்களின் இமைகளைஒருகால் மூடித்திறந்தற்கு வேண்டும்பொழுது. (332) 157. | என்றுகொண்டுயர்தேர்ப்பாக னிசைத்தனயாவுங்கேட்டு வன்றிறலமரர்கோமான் மனமகிழ்ந்திருந்தபோதில் துன்றியவமரர்யாருந் தனித்தனிசுருதியோடும் வென்றிடுபடையுமற்றும் வேண்டுவபலவுமீந்தார். |
(இ - ள்.)உயர் தேர் பாகன் - சிறந்த ரதசாரதியான மாதலி, என்று கொண்டு இசைத்தன - என்று சொல்லியவையாகிய, யாஉம்- எல்லாவற்றையும், கேட்டு-, -வல் திறல் அமரர் கோமான் - மிக்க வலிமையையுடைய தேவேந்திரன், மனம் மகிழ்ந்து இருந்த போதில் - இதயஞ் சந்தோஷித்திருந்த சமயத்தில்,-துன்றிய அமரர் யார்உம்- (அங்குவந்து) நெருங்கியுள்ள தேவர்களனைவரும்,தனித்தனி - தனியேதனியே, சுருதியோடுஉம் - வேதமந்திரங்களுடனே, வென்றிடு படைஉம்-(பகைவரை) வெல்லுதற்கு ஏற்ற ஆயதங்களையும்,மற்றுஉம் வேண்டுவ பலஉம்-இன்னும்வேண்டுவன பலவற்றையும், ஈந்தார்- கொடுத்தார்கள்;(எ - று.) |