பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்255

46.தேவர்க்காக்கினுந்தெயித்தியர் காக்கினுஞ்சிறந்த
மூவர்க்காக்கினுமுறைமுறை மொழிந்தமூவுலகில்
யாவர்காக்கினுமிக்கணத் தியக்கரூரெய்திக்
காவின்மேற்பயில்கடிமலர் கவருவேனென்றான்.

     (இ-ள்.)தேவர் காக்கின்உம்-தேவர்கள் காவல்புரிந்தாலும், தெயித்தியர்
காக்கின்உம்-அசுரர்கள் காவல் புரிந்தாலும், சிறந்த மூவர் காக்கின்உம்-
தேவர்களுட் சிறந்த (சிவன் விஷ்ணு பிரமன் என்ற) திரிமூர்த்திகள் காவல்
புரிந்தாலும், முறைமுறை மொழிந்தமூ உலகில்-முறைமுறையே சொல்லப்பட்ட
மூவுலகத்திலும், யாவர் காக்கின்உம்-எப்படிப்பட்ட மேன்மையுடையோர்
காவல்புரிந்தாலும், இ கணத்து - இந்நொடியுலேயே, இயக்கர் ஊர் எய்தி -
இயக்கரின் ஊரையடைந்து, காவின்மேல்-சோலையிலே,பயில்-இருக்கின்ற,
கடிமலர்-நறுமணமுள்ள மலரை, கவருவேன் - பறித்துக்கொண்டு வருவேன்,
என்றான்- என்றுகூறினான்;(எ-று.)

     உம்மைகள் -சிறப்புப்பொருளன. மோனைநோக்கி,'தெயித்தியர்'என
வந்தது.                                                 (383)

47.-அநுமான்'நீவிரும்பிய வரத்தைக் கேள்'எனல்.

ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங்கேட்டு
நீண்டதோள்வயமாருதி நெடிதுவந்தருளிப்
பாண்டவன்றனைப்பண்புறப்பரிவினானோக்கி
வேண்டுநல்வரம்வேண்டுக வீண்டைநீயென்றான்.

     (இ-ள்.) ஆண்டு- அப்போது, அவன் - அந்த வீமசேனன், புகல் -
கூறிய, உறுதிஉம் - உறுதியுள்ள வார்த்தையையும், ஆண்மைஉம் - வீரந்
தோற்றுஞ் சொல்லையும்,கேட்டு-,-நீண்டதோள்வய மாருதி - நீண்ட
தோள்களையும்வலிமையையுமுடைய அனுமான், நெடிது உவந்தருளி - மிக
மகிழ்ந்து,-பாண்டவன்தனை-பாண்டுகுமாரனாகியஅந்த வீமசேனனை,
பண்புஉற - நல்லதன்மைகள் பொருந்துமாறு, பரிவினால்நோக்கி-
அன்போடு பார்த்து, 'ஈண்டை- இப்பொழுது, வேண்டும் - (உன் மனம்)
விரும்புகின்ற, நல் வரம் - சிறந்த வரத்தை, நீ-,வேண்டுக - கேட்டுப்
பெற்றுக் கொள்வாயாக',என்றான்- என்று கூறினான்,(எ-று.)

     ஆண்மை -ஆண்மைதோன்றக் கூறுஞ் சொற்களுக்கு ஆகுபெயர்.
வயம் என்று பிரித்தால், வெற்றியென்று பொருள்.                   (384)

48.-போரில்அருச்சுனன் தேர்க்கொடிமீது எழுந்தருளிக்
கூத்தாடுமாறு வீமன்வரம் வேண்டுதல்.

நெடியகானகநீங்கியா நெறியினேரலரைக்
கடியவெஞ்செருப்புரிபெருங் குருதிவெங்களத்தில்
அடிகளாங்கெழுந்தருளிவந் தருச்சுனன்றடந்தேர்க்
கொடியின்மீதுநின்றுவந்துகூத் தாடுதிரென்றான்.