பக்கம் எண் :

256பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) யாம்- நாங்கள், நெடிய கானகம் நீங்கி - (காட்டில்
வசிக்கவேண்டிய நாட்களையெல்லாம்வசித்துக் கழித்து இந்த) நெடிய
காட்டை விட்டுப்போய்,-நெறிஇல் நேரலரை - நன்னெறியிற்
செல்லுதலில்லாத (எம்) பகைவரை, கடிய வெம் செரு புரி பெருங் குருதி
வெம் களத்தில் - மிகக்கொடிய போரைச் செய்தற்கு இடனானதும்மிக்க
இரத்தவெள்ளம் பாயப்பெற்றதுமான கொடிய போர்க்களத்திலே, ஆங்கு -
அப்போது, அடிகள் - பெரியோரே!  எழுந்தருளிவந்து-,அருச்சுனன் தட
தேர் கொடியின்மீது - அருச்சுனனுடைய பெரிய  தேரின் கொடிமீது,
நின்று-,உவந்து - மகிழ்ந்து, கூத்தாடுதிர் - கூத்தாடுவீராக, என்றான்-என்று
(வீமன் அனுமானிடம்) வரம் வேண்டினான்;(எ-று.)

     நெறியின் -முறைமையாக, செருப்புரி எனினுமாம்.          (385)

49.-அவ்வரத்தைவீமனுக்கு அனுமான்தர, இலங்கையில்
தீயிட்டபோதுகொண்ட உருவத்தைக் காட்டுமாறு
வீமன் வேண்டுதல்.

நீட்டுமவ்வரமவனுக்கு நேர்ந்தனனனுமான்
மீட்டுநல்வரமொன்றுமுன் வேண்டினன்வீமன்
ஈட்டுமாநிதியிலங்கைதீ யிட்டநாளிசைந்த
மோட்டுருத்தனைக்காட்டுகென்றிறைஞ்சினன்முதல்வன்.

     (இ-ள்.)நீட்டும்-(வீமன்) கேட்ட, அ வரம் - அந்தவரத்தை,
அவனுக்கு - அந்த வீமசேனனுக்கு, அனுமான்-,நேர்ந்தனன்-(தந்ததாக)
உடன்பட்டுக் கூறினான்: முதல்வன் - (வீரரில்) மேம்பட்டவனான,வீமன்-,
மீட்டுஉம் - மறுபடியும், 'ஈட்டும்- மிகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள, மா நிதி-
மிக்க செல்வத்தையுடைய, இலங்கை-இலங்கையிலே, தீ இட்ட நாள் -
நெருப்பு வைத்த காலத்தில், இசைந்த - கொண்டிருந்த, மோடு உருதனை-
பருத்த உருவத்தை, காட்டுக - காட்டுவாயாக,'என்று-,இறைஞ்சினன் -
வணங்கினவனாகி,-நல்வரம் ஒன்று - சிறந்த ஒரு வரத்தை, முன்-
அவ்வனுமானெதிரே, வேண்டினன்-;(எ-று.)

     இறைஞ்சினன் -முற்றெச்சம். காட்டுகென்று - வியங்கோளின்
அகரவீறு தொகுத்தல்.  'இலங்கைதீயிட்ட நாள்'என்றபோதிலும்,
கடல்கடந்த வுருவத்தைக் காட்டு என்று வினாவியதாகக்கருத்துக்
காணலாம்: அப்போது பேருருக்கொண்டமையே பிரசித்தம்.     (386)

வேறு.

50.-உடனேஅனுமான் திரிவிக்கிரமனைப்போல்
பேருருக்கொள்ளுதல்.

என்றடல்வீம னிசைத்திடு முன்னம்
ஒன்றியிவ் வேழுல கங்களு மொன்றாம்
மன்றுளதார்புனைவாமன னைப்போல்
நின்றுநிமிர்ந்தன னித்தமு முள்ளான்.