மன்றல்மலர்ப்பொழில் என்று பாடமுரைத்து, மன்றல் மலரைக்கொண்ட பொழிலானது, வாவியின் - வாவியோடு, மன்னும் என்பாருமுளர். ஓசனை=யோசனை: நாற்காததூரம்: மரூஉமொழி. (399) 63. | அப்பொழில்காவ லரக்கரனேகர் எப்பொழிலுந்திறை கொள்ளுமெயிற்றார் துப்புடனேயவ ராவிதொலைத்தால் செப்பியமாமலர் சென்றுறலாகும். |
(இ-ள்.) அபொழில் காவல் - அந்தச் சோலையைப் பாதுகாத்தலையுடைய,அரக்கர் அனேகர் - அனேகராட்சசர் (உளர்): (அவர்கள்),-எபொழில்உம்-எல்லாவுலகத்தையும், திறைகொள்ளும் - திறையாகக் கொள்ளுகின்ற [தின்றுகொல்லவல்ல],எயிற்றார்- பற்களையுடையவர்: அவர் ஆவி - அந்த அரக்கரினுயிரை, துப்புடன் - வலிமையுடனே, தொலைத்தால்- அழித்தால், செப்பிய-(நீ) கூறிய, மா மலர் - சிறந்த மலரை, சென்றுஉறல் ஆகும்- போய்ப் பெறலாகும்;(எ-று.) காவலர்அக்கர் என்று பிரிக்கவும் இடனுண்டு: அங்ஙன் பிரிப்பின், அக்கர் - யக்கர் என்னவேண்டும். (400) 64. | அல்லதுநீடள காபதிதானும் மெல்லியலும்பொழின் மேவியபோது நல்லுறவாகி நயத்தொடுசென்றான் மல்லன்மலர்தரு வோடுவழங்கும். |
(இ-ள்.)அல்லது - இவ்வாறு கொள்ளாவிடின், நீடு அளகாபதிதான்உம்-பெருமை பொருந்திய அளகைக்குத் தலைவனாகிய குபேரனும், மெல்இயல்உம்-அவனது (மனைவியாகிய)பெண்ணும், பொழில் மேவிய போது - அந்தச் சோலையிலேவந்து தங்கியபோது, (அவர்களோடு), நல் உறவு ஆகி - நல்ல நட்புறவுபூண்டு, நயத்தொடு - வணக்கத்தோடு, சென்றால்- (அவரிருக்கு மிடத்துக்குப்) போனால், (அவன்), மல்லல் மலர் - வளப்பம்பொருந்திய அந்த மலரை, தருவோடு - (அதுதோன்றிய) கொடியுடனே, வழங்கும்-கொடுப்பான்; (எ-று.) இது, சமாதானவழியாற் பூவைக்கொள்ள உபாயங்கூறியது. தருவோடு கற்பகதருவோடு என்று கூறுவாருமுளர்: இனி இந்த மலர் கற்பகதருவினுடையதென்றும், குபேரனிடமும்உள்ளதென்றும் ஒரு சாரார் கொள்கின்றனர். (401) 65.-நெறிமுதலிய கூறிய அநுமான் வீமனுக்கு விடை கொடுத்தல். உறுதியுமொன்னல ரூக்கமுமேகும் நெறியினதெல்லையினீர்மையுநெறியில் குறிகளும்யாவையு மன்பொடுகூறி அறிவுடையான் விடையன்பொடளித்தான். |
|