பக்கம் எண் :

292பாரதம்ஆரணிய பருவம்

     சங்கோடணன்இயற்கையில் மிக்கஉடல்வலிமையையும் அடங்காப்
பெருஞ் சீற்றத்தையும் கம்பீரமான தோற்றத்தையு முடையவனாதலாலும்,
இப்பொழுது வீமன் கதையால் மார்பிலடிபட்டு வலியொடுங்கினமையாலும்,
புண்புகவுட்கியுழைக்கும்வேழம் இவனுக்கு உவமை கூறப்பட்டது.  நல்காய்-
முன்னிலையொருமை யெதிர்மறைமுற்று; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து
கெட்டது.  புரம்-இடவாகுபெயர்.  உட்கியிளைக்கும்என்று பிரதிபேதம்.(455)

119.-வீமன்விருப்பத்தையறிய உருத்திரசேனனென்னும்
மகனைக்குபேரன் விடுத்தல்.

கோதிலியக்கனி யாவுங்கூறக்கேட்டுத்
தாதையுருத்திர சேனன்றன்னைநோக்கி
மாதர்மலர்ப்பொழி லூடுவந்தமனித்தன்
ஏதிலருத்திய னென்னக்கேட்டியென்றான்.

     (இ-ள்.) கோதுஇல் இயக்கன்-குற்றமில்லாத (சங்கோடணனென்னும்)
அந்த யக்ஷன், யாஉம் கூற-இவையெல்லாவற்றையுஞ் சொல்ல, கேட்டு-,
உருத்திரசேனன் தன்னைநோக்கி-ருத்திரசேனனென்னும் (தனது) இளைய
குமாரனைப்பார்த்து, தாதை-(அவனது) தந்தையான குபேரன், 'மாதர்
மலர்ப்பொழிலூடுவந்த மனித்தன் - (கண்பார்க்கு) விருப்பத்தை
விளைக்கின்ற(நமது) பூஞ்சோலையிலேவந்த மனிதனை,ஏதில் அருத்தியன்
என்ன கேட்டி-எந்தப் பொருளில் விருப்பமுடையவ னென்று (நீ போய்க்)
கேட்பாய்,'என்றான்-என்றுகூறினான்;(எ-று.)

     ருத்திரசேனனென்பதற்கு - கொடுமையான
சேனைகளையுடையவனென்றுபொருள். மனித்தன்-மனிதன் என்பதன்
விரித்தல்.

120.-உருத்திரசேனன்வீமனைச்சென்றுகாணுதல்.

தந்தையுரைத்தருள் வாய்மைதலைமேற்கொள்ளா
மைந்தனுமப்பொழி லூடுசென்றுமன்னிச்
சிந்தியரக்கர்சி ரங்கள்குன்றஞ்செய்து
கந்தனினிற்கும றத்தினானைக்கண்டான்.

     (இ-ள்.)தந்தை - (தனது) பிதாவான குபேரன், உரைத்தருள-
(அன்போடு) சொல்லிய, வாய்மை-வார்த்தையை, தலைமேல்-கொள்ளா-
தலையின்மேற்கொண்டு [கௌரவித்து],மைந்தன்உம் - குமாரனான
உருத்திரசேனனும், அ பொழிலூடு சென்று மன்னி - அந்தச்
சோலையினிடத்திற்போய்ச் சேர்ந்து, அரக்கர் சிரங்கள் சிந்தி குன்றம்
செய்து கந்தனின் நிற்கும் மறத்தினானை-இராக்கதர்களதுதலைகளை
அறுத்துத் தள்ளி மலைபோலக்குவித்து முருகக் கடவுள்போல
(ப்பராக்கிரமங்கொண்டு) நிற்கிற வலிமையையுடைய வீமனை,கண்டான் -
பார்த்தான்;(எ-று.)

     வாய் -வாயிலிருந்துவருஞ் சொல்லுக்கு ஆகுபெயர்;மை -
பகுதிப்பொருள்விகுதி.  தலைமேற்கொள்ளுதல்- சிரசாவகித்தல்.