ஸ்தாணு: இதற்கு-நெடுங்காலம் அழியாது நிலைநிற்பவனென்று பொருள். (501) 26.-அங்குத்தானேபாண்டவர்கள் ஒன்பதுவருஷங் கழித்தல். அன்பொடொருநாளென வனந்தநெடுநாளங்கு இன்பமொடிருந்தனர்க ளெக்கதையுங்கேட்டாண்டு ஒன்பதுகழித்தனர்க ளிவ்வகையொருங்கே பின்பவணிகழ்ந்ததொரு பெற்றியுரைசெய்வாம். |
(இ-ள்.)(அருச்சுனனொழிந்தபாண்டவர்கள்), அன்பொடு-அன்புடனே, ஒரு நாள் என-ஒருநாள்போல, அனந்தம் நெடுநாள் - எல்லையில்லாத தொடர்ச்சியான பலநாள், அங்கு-அவ்விடத்தில், [அஷ்டகோணமுனி வனத்தில்],இன்பமொடு இருந்தனர்கள் - சௌக்கியத்தோடு இருந்து, எ கதைஉம் கேட்டு-அநேக புண்ணிய சரித்திரங்களை(அம்முனிவர்சொல்ல)க் கேட்டுக்கொண்டு, இ வகை-இவ்வாறு, ஒருங்கு-ஒருசேர, ஆண்டு ஒன்பது கழித்தனர்கள் - ஒன்பதுவருஷகாலங்கழித்தார்கள்: (கழிக்கையில்), பின்பு அவண் நிகழ்ந்தது ஒருபெற்றி - பின்பு அவ்விடத்து நடந்ததொரு தன்மையை [வரலாற்றை],உரைசெய்வாம்-(யாம்) சொல்வோம்;(எ-று.)- அதனைமேற்சருக்கத்திற்காண்க.
அவண்,அண்-இடப்பொருள்காட்டும் விகுதி. முனிவர் வடிவங் கொண்டு பாண்டவரருகில் வசித்துவந்த ஜடாசுரன் பாண்டவர்களுடைய படைக்கலம் முதலியவற்றின் உளவை யறிந்தவனாய்,வீமசேனன் வேட்டையாடச் சென்றிருக்கையில், திரௌபதியுடன் யுதிஷ்டிராதிகளையும்கவர்ந்து ஓடத்தொடங்க, சகதேவன் முயன்று அவ்வசுரனிடத்தினின்று விடுபட்டு வீமசேனனைக்குறித்துக் கோவென்று கதற, அப்போது தருமபுத்திரன் இராக்கதன் விரைந்து செல்லமுடியாதபடி மிக்க சுமையாகக் கனத்து, மற்றையோரைப் பார்த்து 'அஞ்சற்க: இனி இவ்வசுரனால்விரைந்து செல்லமுடியாது:விரைவில் வீமன் வந்திடுவான்' என்று கூறாநிற்கையில்,சகதேவன் அவனுடன் பொருமாறு அறைகூவ, அவ்வேளையில்வீமசேனன் வந்து, நிகழ்ந்ததுகண்டு அவ்வசுரனோடு பொருது அவனைஉயிர்மாய்த்தானென்பது, முதனூலிற்கூறிய சடாசுரவதையின் சுருக்கம். (502) சடாசுரன்வதைச்சருக்கம் முற்றிற்று. |