(இ-ள்.) அபுனலில்-அந்த நீர்வெள்ளத்தில், ஆர்தரு மணம் கமழ - நிறைந்த வாசனைவீசும்படி, அம் தண் மெய் பதுமம் நாள் மலர்-அழகிய குளிர்ந்த வடிவத்தையுடைய புதிதாய்மலர்ந்த தாமரை மலரொன்று, மீதுஏ மிதந்து வர - மேலே மிதந்துகொண்டுவர, மைபதுமம் வாள் விழி மடந்தை- அஞ்சனமணிந்த தாமரைமலர்போன்ற ஒளியையுடைய கண்களையுடைய திரௌபதி, அது காணா-அதனைக்கண்டு, (அம்மலரை), கை நாள் பதுமம் மலர் உற - (தனது) கையாகிய அன்றுமலர்ந்த தாமரைமலரிலே பொருந்தும்படி, கடிது எடுத்தாள் - விரைவாக எடுத்தாள்;(எ-று.) பதுமம் -பத்மம்; வடசொல். மைப்பதுமம் என எடுத்து, நீலோற்பல மலரென்றுங் கொள்ளலாம். வாள்விழி - வாட்படைபோலுங் கூரிய கொடிய கண்களுமாம். (504) 3.-எடுத்தமலரைத்திரௌபதி வீமனது கையிற்கொடுத்து இது எங்கு உளதென்றுவினாவல். எடுத்தமலர்கைக்கொடொ ரிமைப்பின்மயிலன்னாள் அடுத்துவயமாருதியை யம்மலரவன்கைக் கொடுத்திம்மலரெங்குளது கூறுகெனவமரில் தொடுத்தவயவாகைபுனைதோன்றலிவைசொல்வான். |
(இ-ள்.)எடுத்த மலர்-(அவ்வெள்ளத்தினின்று தான்)எடுத்த பூவை, கை கொடு - கையிலே யேந்திக்கொண்டு, மயில் அன்னாள்- (சாயலில்) மயிலையொத்ததிரௌபதி, ஒர் இமைப்பின்-ஒருநிமிஷத்திலே, வய மாருதியை அடுத்து-வலிமையையுடைய வீமனைச்சேர்ந்து, அ மலர் அவன் கை கொடுத்து - அந்தப்பூவை அவனது கையிலே கொடுத்து, இ மலர் எங்கு உளது கூறுக என-இவ்வகைப் பூ எவ்விடத்திலுள்ளது சொல்வாயென்று வினாவ,-அமரில்தொடுத்த வய வாகை புனைதோன்றல் - போரிலே தொடுக்கப்பட்ட வெற்றிக்கடையாளமான காட்டுவாகைப்பூமாலையைஅணிகிற வீமராசன், இவை சொல்வான் - இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவற்றை மேலிரண்டுகவிகளிற் காண்க. அமரில் வாகைபுனையென இயையும். இங்கே வயவாகை, கீழிரண்டு சருக்கங்களிலும் கூறப்பட்ட வெற்றிகளைப்பற்றியது. மயிலை,பெண்களின் நடைக்கும் உவமையாகச் கொள்வாருமுளர். தோன்றல் - மற்றையோரினுஞ் சிறந்து விளங்குபவன்: அல்-கருத்தாப்பொருள் விகுதி. (505) 4.-இதுவும்,மேற்கவியும் - ஒருதொடர்: வீமன் இவ்வகைப் பூவை எங்குஇருப்பினும் கொணர்ந்துகொடுப்பேனெனல். முன்புமுன்மலர்க்குழ றனக்கிமலர்முன்பால் அன்புடனியக்கர்பதி நின்றுமருள்செய்தேன் |
|