(இ-ள்.) (அம்மலையில்),ஒரு சார் - ஒருபுறத்தில், மரகதம் மணி பணி செய் மாளிகைகள் - மரகதரத்தினத்தால் தொழில்செய்யப்பட்ட வீடுகளும்,- ஒருசார்-ஒருபக்கத்தில், அரி மணி அழுத்தியன ஆலயமது - இந்திரநீலக்கற்களைப்பதித்துக்கட்டின வீடுகளும்,-ஒருசார்-ஒருபக்கத்தில், எரி மணி அழுத்தியன இல்லின் விதம் - நெருப்புப்போற் செந்நிறமாய் விளங்குகிற பதுமராகமணிகளைப்பதித்தனவான வீடுகளின்வகைகளும்,- ஒருசார் -ஒருபக்கத்தில், தருணம் மணி முத்தின் இயலும் சதனம்-(ஒளியிற்) சிறப்பையுடைய நவரத்தினங்களுள் முத்துக்களா லமைந்த வீடுகளும், (உள்ளன); அரி - ஹரி;இந்திரன்;வடசொல். அரிமணி - இந்திரநீலம். தருணமணிமுத்தின் - சிறந்த மாணிக்கம் முத்து என்பவற்றால்என்று உரைப்பாருமுளர். இளமையுணர்த்துந் தருணமென்னும் வடசொல், இங்கே இலக்கணையாய்ச்சிறப்பு எனப்பட்டது;தருணம்-புதுமையுமாம். ஆலயம், ஸதநம் - வடசொற்கள்: சாதியொருமை: அது-பகுதிப்பொருள்விகுதி.(510) 9. | கின்னரர்பயிற்றுமெழு கீதமெழுமொருசார் மின்னனையபாவையரும்விஞ்சையருமொருசார் அன்னநடைமங்கையரு மாரணருமொருசார் மன்னுமலியக்கரு மடந்தையருமொருசார். |
(இ-ள்.)ஒருசார் - ஒருபக்கத்தில், கின்னரர் பயிற்றும் எழு கீதம் எழும் - கின்னரரென்னுந் தேவசாதியராற் பாடப்படுகிற எழுவகைச் சுரங்களாலாகிற சங்கீதங்கள் பொருந்தும்;ஒருசார் - ஒரு பக்கத்தில், விஞ்சையர்உம் - வித்தியாதரர்களும், மின் அனையபாவையர்உம்- மின்னலையொத்தசித்திரப்பதுமைபோலழகிய (அவர்) மகளிரும், (உள்ளனர்); ஒருசார் - ஒருபக்கத்தில், ஆரணர்உம் - வேதம்வல்லமுனிவரும், அன்னம் நடை மங்கையர்உம் அன்னப் பறவையின் நடைபோன்ற நடையையுடைய (அவர்கள்) பத்தினியரும், (உள்ளனர்);ஒருசார் - ஒருபக்கத்தில், மன்னும் மல் இயக்கர்உம்-நிலைபெற்றவலிமையையுடைய யக்ஷர்களும், மடந்தையர்உம் - (அவர்கள்) மகளிரும், (உள்ளனர்);(எ-று.) உயர்திணையாகஉம்மைபெற்று வருஞ் சொற்களிடையே அஃறிணைச் சொல்லான ஆரணம்என்பது வருதற்கு இயல்பு இல்லாமையால் 'ஆரணமும்' என்ற பாடம்சரியன்று. விஞ்சையர்-மாலிகாஞ்சநம் முதலிய மாயவித்தையுடையவர்;விஞ்சை-வித்யா என்னும் வடசொற் சிதைவு. கின்னரர்-பதினெட்டுத்தேவகணங்களுள் ஒருவகையார்;மானுடமுகமும் குதிரை மேனியுமுடையவரென்பர்: கின்னர மென்னும் வாத்தியத்தை யெப்பொழுதுங் கொண்டிருத்தலால், இவர்களுக்குக் கின்னரரென்று பெயர்போலும். எழுகீதம்-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பன;முறையே இவற்றிற்குரிய எழுத்துக்கள், ஸரிகமபதநி என்பவையாம்:இவை தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும். (511) |