பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்33

மதம்வேள் என்று பிரித்து-காமமதத்தையுண்டாக்கும் வேள் எனினுமாம்.
நினைப்பதே, ஏகாரம்-நினைப்பது தகுதியன்று என்ற பொருளைத் தந்தது.(42)

வேறு.

43.- தவம்புரியும் அருச்சுனனுக்குச் சூரியன் கோடையிலும்
குளிர்ந்திருத்தல்.

பண்ணுக்கு வாம்பரித்தே ராதவனும் பணிந்துபசு பதியை
                                      நோக்கி,
மண்ணுக்குத் தவம்புரியுந் தனஞ்சயற்குக் கோடையினு
                             மதியம் போன்றான்,
எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்குங்கண்ணா வா னிவனே
                                      யன்றோ,
கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்ட
                   மென்பதெல்லாங் கருணையன்றோ.

     (இ-ள்.) பண்-கல்லணை, உக்கு-அறுந்துவிழும்படி, வாம்-
தாவியோடுகின்ற, பரி-குதிரை பூட்டிய, தேர்-இரதத்தையுடைய, ஆதவன்உம்-
சூரியனும்,-பசுபதியை நோக்கி-பரமசிவனைக் குறித்து, பணிந்து-வணங்கி,
மண்ணுக்கு-(பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரைவென்று) இராச்சியத்தைப்
பெறும்பொருட்டு, தவம் புரியும்-தவஞ் செய்கின்ற, தனஞ்சயற்கு-
அருச்சுனனுக்கு, கோடையின்உம்-வெயிற்காலத்திலும், மதியம் போன்றான்-
சந்திரனையொத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும்
புவனம் யாவினுக்குஉம்-(பதினான்குஎன்கிற) கணக்குக்கு வருகின்ற
உலகங்களெல்லாவற்றிற்கும், கண் ஆவான்-கண்ணாகுபவன், இவன் ஏ
அன்றோ-இச் சூரியனேயா மன்றோ?கண்ணுக்கு-நேத்திரத்துக்கு, புனை
மணி பூண் - அணிதற்குரிய அழகிய ஆபரணம், என்பது எலாம் - என்று
சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம்-(பிறர்மேற்) கண்சென்றவிடத்து
உண்டாகின்ற, கருணை அன்றோ - கிருபையையே யன்றோ?(எ - று.)

    "கண்ணுக்கணிகலங் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு
செய்வது கருணையென்பது பிரசித்தமாதலால், உலகமனைத்துக்குங்
கண்ணாகவிருக்கின்ற சூரியன் மிகக் கருணையுடையவனாத் தவஞ்செய்யும்
அருச்சுனனைக் கோடைக்காலத்திலும் சுடாமலிருந்தா னென்றார்:
இவ்வருச்சுனன் கடுங்கோடையிலும் வெயிலை இலட்சியஞ் செய்யாதிருந்தா
னென்றவாறு.  "கண்ணோட்டமென்னுங் கழிபெருங் காரிகை,
யுண்மையானுண்டிவ்வுலகு" என்றார், நாயனார். சூரியனுக்கு "ஜகச்சக்ஷு :"
என்று ஒருபெயர் வடமொழியிலிருத்தல், "கண்ணாவானிவன்" என்ற இடத்துக்
கருதத்தக்கது: சூரியனின்றிக் கண்ணொளி விளங்கா வாதலால்,
'கண்ணாவானிவன்' என்றது என்பாரு முளர். பண்ணுக்கு வாம் பரி-இசையின்
தாளத்துக்கு இயையத் தாவும் பரிஎனினுமாம். புவனம்-உயிர்கட்கு,
ஆகுபெயர். கோடை - ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலம்.