பக்கம் எண் :

342பாரதம்ஆரணிய பருவம்

கொடிய ஆயுதங்களைப்பிரயோகித்து, இகலோனை-வலிமையையுடைய
வீமனை,விரைந்து-துரிதமாக, பற்றுமின் - பிடித்துக்கொள்ளுங்கள்,'என-
என்று, பகரல் உற்றான்-கூறுபவனானான்;(எ-று.)-மற்று-அசை.      (533)

32.-இயக்கர்படைமேற் கணைதூவிவீமன்
சிரித்துஉருத்தல்.

பற்றுமெனவந்தபடைவீரருயிரெல்லாம்
கொற்றமிகுவெங்கணைகுளிக்கும்வகைதொட்டே
செற்றமிகநின்றெதிர் சிரித்தனனுருத்தான்
பற்றலர்புரம்பொடி படுத்தவனையன்னான்.

     (இ - ள்.)பற்றும் என - (இவ்வாறு சாலேந்திரன்) பிடியுங்களென்று
கூற, வந்த-(அங்ஙனமே தன்னையெதிர்த்து)வந்த, படை வீரர்-
சேனாவீரர்களது,உயிர்எல்லாம்-உயிர்களிலெல்லாம், கொற்றம் மிகு வெம்
கணை- சயம்மிகுந்த கொடிய அம்புகள், குளிக்கும் வகை-
தைத்துமுழுகும்படி, தொட்டு-பாணப்பிரயோகஞ்செய்து, பற்றலர்புரம் பொடி
படுத்தவனைஅன்னான்- பகைவர்களதுதிரிபுரத்தையெரித்துச்சாம்பலாக்கின
சிவபிரானைப்போன்ற [ஆற்றல்மிக்க]வீமன், செற்றம் மிக-கோபம் அதிகப்பட,
எதிர்நின்று-எதிரில்நின்று,சிரித்தனன்-சிரித்து, உருத்தான்-கோபித்தான்;(எ-று.)

     உடலெல்லாம்என்னாதுஉயிரெல்லாம் கணைகுளிக்கும்வகையென்றது,
பகைவருடம்பையழித்து உயிரையொழிக்கும்படி யென்றவாறு. புரம்-வடசொல்.
                                                        (534)

33.-வீமன்கணையால்இயக்கர்வீழ்ந்திட, கண்ட
விஞ்சையர்வீமன்மீது கணைதொடுத்தல்.

இவ்வகைபொழிந்த வடிவாளியினியக்கர்
மெய்வழிசெழுங்குருதி வேலையிடைவீழ்ந்தார்
அவ்வளவில்விஞ்சைய ரநேகரதுகாணாக்
கைவரிவில்கொண்டவன் மிசைக்கணைதொடுத்தார்.

     (இ-ள்.) இவகை பொழிந்த-இவ்வாறு(வீமன்)சொரிந்த, வடிவாளியின்-
கூர்மையான அம்புகளால், இயக்கர் - (எதிர்ச்சேனையிலுள்ள)இயக்க
வீரர்கள், மெய் வழி செழுகுருதி வேலையிடை-தங்கள்உடம்பினின்று
வழிகிற மிக்க இரத்தவெள்ளத்திலே, வீழ்ந்தார் - இறந்து விழுந்தார்கள்; அ
அளவில் - அவர்கள் விழுந்தமாத்திரத்தில்,  விஞ்சையர் அநேகர் -
வித்தியாதரர்கள் பலர், அது காணா-அதனைநோக்கி, கை வரி
வில்கொண்டு - (தத்தம்) கையிலே கட்டமைந்த வில்லையேந்திக்கொண்டு,
அவன்மிசை - அவ்வீமன்மேல், கணைதொடுத்தார்-அம்புகளை
யெய்தார்கள்;(எ - று.)

     கை வரி வில்கொண்டவன்மிசை யென எடுத்து, கையில்
வில்லையேந்தியவீமன்மீது என்று முரைக்கலாம்.                (535)