(இ - ள்.)வீசு படை ஒரு கோடி-(அங்ஙனம் அவர்கள்) எறிந்த கோடிக்கணக்கான ஆயுதங்கள், விசை பட ஓடி-வேகமாகச்சென்று, மிசை வர - (தன்) மேலே வர, வீமனும்-, பாசதரன் எதிர் நீலம் மயில் ஒரு பாகன் நிகர் என - காலபாசத்தைக் கையில்தரித்துள்ள யமனது எதிரிலே சென்ற நீலநிறமுள்ள மயில்போலுஞ் சாயலையுடையஉமாதேவியை(த் தனது) ஒரு [இடது]பக்கத்திற் கொண்டவனானசிவபெருமான் உவமையென்னும்படி, வேகியா - உக்கிரங்கொண்டு, ஆசை தொறுஉம் முகில் போல வளைபவர் ஆகம் இரு பிளவு ஆ - எல்லாத்திக்குக்களிலும் மேகங்கள்போல(த் தன்னை)ச்சூழ்ந்துள்ளவர்களான வித்தியாதரவீரர்களது உடம்பு இரண்டு துண்டாம்படியும், உளம் கூசி அலமரும் ஆறு - (அவர்கள்) மனம் நடுங்கிச் சுழலும்படியும், தரு வளர் கோடு கொடு - மரங்களிலே வளர்ந்த கிளைகளையெடுத்து அவற்றால்,நனி சாடினான்- மிகமோதினான்; (எ -று.) சிவபிரான் யமனையெதிர்த்தது,மார்க்கண்டேயருக்காக அவனது செருக்கை யடக்கவேண்டியபொழுதி லென்க. கோடி - இங்கே பல வென்றபொருளது. மயில்-உவமையாகுபெயர். அலமரும், அலமா-பகுதி. மிசைவரச் சாடினான்என்க. ஆசை - திக்கு. (554) 53. | ஆயபொழுதளகாதிபதியுயி ராயவணிமணிமான்விறல் சீயமெனவவன்மீதுபலபடை சிந்தியமர்செய்துமுந்தினான் வாயுகுமரனும்வேகமுடனவன் மார்புகிழிதரமோதினான் காயபலமொடுதாயமறவொரு காயமிருகடகக்கையால். |
(இ - ள்.) ஆயபொழுது - (அப்படி) ஆன அந்தச்சமயத்தில், அளகா அதிபதி உயிர் ஆய அணி மணிமான - அளகாநகரத்துக்குத் தலைவனான குபேரனது பிராணசிநேகிதனாகவுள்ளஅழகிய மணிமானானவன்,விறல் சீயம் என-பராக்கிராமத்தையுடைய சிங்கம் போல, அவன்மீது - அவ்வீமன்மேலே, பல படை சிந்தி-அநேகம் ஆயுதங்களைப்பிரயோகித்து, அமர் செய்து - போரையியற்றிக் கொண்டு, முந்தினான்- முன்னேவந்தான்; (அவ்வாறு வர), வாயு குமரன்உம் - வாயுவினது குமாரனானவீமனும், வேகமுடன்-விரைவாக, அவன் மார்பு கிழிதர-அம்மணிமானதுமார்பு பிளக்கும்படி, காயம் பலமொடு-(தனது) தேகத்தில்(எவ்வளவுவலிமையுண்டோ அவ்வளவு) வலிமையையுங் கொண்டு, தாயம்அற-(சிறிதுந்தனக்கு) இளைப்பில்லாமல்,ஒரு காயம்-(அம்மணிமானது)ஒப்பற்ற உடம்பை, இரு கடகம் கையால் - கடகமென்னும்வளையையணிந்த(தனது) இரண்டுகைகளாலும், மோதினான்-தாக்கினான்;(எ - று.) 'தாயமுற'என்ற பாடத்துக்கு - (மணிமான்) துன்பத்தையடைய வென்க:சமயவாய்ப்பு உண்டாக என்றலும் உண்டு:தாயம்-துன்பம், சோர்வு, வாய்ப்பு. சீயம்=ஸிம்ஹம். இரு கையால் என்ற விடத்து, இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றும்மை விகாரத்தால் தொக்கது. (555) |