பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்353

54.முன்புபெறுபுயமொய்ம்பனவன்மரு மத்தின்விசைபட
                               மொத்தலும்,
என்புதசைநிணமிந்திரியம்வலியென்பவிவைநிலை
                                 சிந்தியே,
துன்பமுறமனநொந்து தளர்வொடுதுத்திமணியுரகத்தின்
                                    மேல்,
வன்பினுடனுருமுற்றதெனவொளிமட்கி
                         வெருவுடனுட்கினான்.

     (இ - ள்.)முன்பு பெறு புயம் மொய்ம்பன் - தலைமைபெற்ற
தோள்வலிமையையுடைய வீமன், அவன் மருமத்தின்-அம்மணிமானது
மார்பிலே, விசை பட-வேகம் பொருந்த, மொத்தலும்-அடித்த வளவில்,-
என்பு தசை நிணம் இந்திரியம் வலி என்ப இவை நிலைசிந்தி-எலும்பும்
மாமிசமும் கொழுப்பும் உறுப்புக்களும் வலிமையும் என்று சொல்லப்படுகிற
இவைகள் தத்தம் நிலைகுலையப்பெற்று,துன்பம் உற - துன்பம்மிக, மனம்
நொந்து - மனம்வருந்தி, தளர்வொடு-தளர்ச்சியுடனே, துத்தி மணி
உரகத்தின்மேல் வன்பினுடன் உரும் உற்றது என-படப்புள்ளிகளையும்
மாணிக்கத்தையு முடைய நாகம் தன்மேல் வலியோடு
இடிவிழப்பெற்றாற்போல,ஒளி மட்கி-ஒளிமழுங்கி வெருவுடன் -
அச்சத்துடனே, உட்கினான்-(மணிமான்)நடுக்கமடைந்தான்;(எ-று.)

     என்ப -எனப்படுவன;பலவின்பால் வினையாலணையும்பெயர். தசை
- இதுவே இலக்கணப்போலியாய்ச் சதையென எழுத்துநிலைமாறி
வழங்குவது.  இந்திரியம் - மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்
ஐம்பொறிகள்.                                             (556)

வேறு.

55.-மாயயுத்தத்தால்தான் இவனைவெல்லலாமென்று
தீர்மானித்துமணிமான் வானத்தி லேறுதல்.

வஞ்சனைபுரியுமா மாயப் போர்க்கலால்
துஞ்சல னிவனெனத் துணிந்து சூழ்ச்சியால்
நஞ்சென வெகுண்டுதன் னயனந் தீயுக
விஞ்சையன் கதுமென விசும்பி லேறினான்.

     (இ - ள்.)விஞ்சையன்-வித்தியாதரனானமணிமான்,-வஞ்சனைபுரியும்
மா மாயம் போர்க்கு அலால் இவன் துஞ்சலன் என துணிந்து-
'வஞ்சனையாற்செய்யப்படுகிற பெரிய மாயையையுடைய யுத்தத்திற்
கல்லாமல்(தருமயுத்தத்தில்) இவ்வீமன் இறவானென்று நிச்சயித்து, தன்
நயனம் தீ உக நஞ்சு என வெகுண்டு - தனது கண்கள் நெருப்பைச்
சொரியும்படி விஷம்போலக் கொடுமையாகக் கோபித்து, சூழ்ச்சியால் -
மாயையினால்,கதுமென விசும்பில் ஏறினான்- விரைவாக ஆகாயத்தில்
எழும்பினான்;(எ - று.)

    துஞ்சுதல்-தூங்குதல்;இச்சொல்லால் இறத்தலைவழங்குவது, மங்கல
வழக்கு.  கதுமென - விரைவுக்குறிப்பு.

    இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                         (557)