58.-வீமனெய்தஅஸ்திரத்தால் மாயையொழிதலின் வருணனை. அசைமணிக்கொடிகொடே ரருக்கன்றன்னெதிர் நிசியெனப்பறந்தது நீலமேனியான் வசையறக்குரிசிலுக் கருளும்வாளியால் திசையுறப்பரந்தமர் செய்தமாயையே. |
(இ-ள்.)நீலம்மேனியான்-நீலநிறமுடைய திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான், வசை அற-பழிப்பில்லாதபடி [புகழ்பொருந்த],குரிசிலுக்கு- பெருமையிற்சிறந்த வீமனுக்கு, அருளும்-கொடுத்தருளின, வாளியால்-அந்த அம்பினால்,திசை உற பரந்து அமர் செய்த மாயை-எல்லாத் திக்குக்களிலும் பொருந்தப் பரவிப் போரைச்செய்த (அந்தமணிமானது) மாயையானது, அசை மணி கொடி கொள் தேர் அருக்கன் தன் எதிர் நிசி என-அசைகின்ற அழகிய துவசத்தைக்கொண்ட தேரையுடைய சூரியனுக்கு எதிரில் இராத்திரிபோல, பறந்தது-விரைந்துஓடிப்போயிற்று;(எ-று.) சூரியனொளிமுன்இருள்போல இருந்தவிடந்தெரியாமலொழிந்தது, திருமாலம்பின்முன் மணிமான்மாயை யென்க. மாயையைக் கருநிறமுடைய தென வருணித்தல் கவிமரபாதலால், அதற்கு நிசி உவமை கூறப்பட்டது. கீழ்க்கவியிற் கூறிய விஷயத்தையே இக்கவியில் உவமைமுகத்தாற் கூறி விளக்கினாராதலின், கூறியது கூறலன்றென்க. (560) 59.-வீமனும்மணிமானும் முறையே புவியிலும்வானிலும் நின்று பொருதல். விறல்புனைவீமனும்விஞ்சைவேந்தனும் நிறைபுவிவிசும்பின்மே னின்றுபோர்செய்தார் எறுழ்வலியிராகவற் கிளையவார்சிலைச் சிறுவனுமிந்திர சித்துமென்னவே. |
(இ-ள்.) எறுழ்வலி இராகவற்கு இளையவார் சிலைசிறுவன்உம்- மிக்கவலிமையையுடைய இராமபிரானுக்குத் தம்பியான நீண்ட வில்லையுடைய லக்ஷ்மணனும்,இந்திரசித்துஉம் என்ன-(இராவணன் மகனான) இந்திரசித்தென்பவனும் போல,-விறல்புனைவீமன்உம்-வெற்றியைக்கொண்ட வீமசேனனும், விஞ்சை வேந்தன்உம்-வித்தியாதரர்க்குத் தலைவனான மணிமானும்,(முறையே), நிறை புவி விசும்பின்மேல் நின்று-நிறைந்த பூமிமேலும் ஆகாயத்தின்மேலும் நிலைநின்று, போர் செய்தார்-போரைச் செய்தார்கள்;(எ-று.) இராமராவணயுத்தகாலத்தில் இந்திரசித்து மாயையால் வானத்திலும் இலக்குமணப்பெருமான் நிலத்திலும் நின்று பெரும்போர் செய்தவாறு போல, இப்பொழுது மணிமான் மாயையால் வானத்திலும் வீமன் நிலத்திலும் நின்று போர்புரிந்தன ரென்க;உவமையணி. வீமன் விஞ்சைவேந்தன் எனக் கூறிய முறைமைக்கேற்ப,புவி விசும் |