பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்39

உரைக்கலாம்.  உருப்பசி-பதரிகாச்சிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த
நாராயணமகாமுனிவரது ஊருவினின்றும் [தொடையினின்றும்] தோன்றினவள்;
இவள் நாராயணமுனிவரது தவத்தைக் கெடுக்கும்படி இந்திரனா லேவப்பட்டு
வந்த தேவஸ்திரீகளை மோகிப்பிக்கும்பொருட்டு அம்முனிவராற்
சிருஷ்டிக்கப்பட்டவள். திலோத்தமை - அழகிய மகளிர்களின்
உடம்பழகுகளில் எள்ளளவு  எள்ளளவாக எடுத்துத் திரட்டிப் பிரமதேவரால்
மேலானவளாகப் படைக்கப்பட்டவள்; இவர்களெல்லாம் பின்பு இந்திரனிடம்
இருந்து, துருவாச முனிவரின் சாபத்தாற் கடலிலொளித்த அவன்
செல்வங்களுடனே தாமும் ஒளித்து, பாற்கடல்கடைந்த காலத்து
அதனினின்றுந் தோன்றின ரென்பான் 'வேலையில்வந்த மாதரீர்'என்றான்.
வேலை-கடற்கரை: கடலுக்கு இலக்கணை.  ஆனவாறு -
உங்களாலானமட்டிலெனினுமாம்.                              (50)

51. - அருச்சுனன் தவஞ்செய்யுமிடத்துக்குத்
தேவமாதர் செல்லுதல்.

என்றுகொண்டிந்திர னியம்பமற்றவன்
துன்றியபேரவைத் தோற்றமிக்கவர்
குன்றிரண்டெடுப்பதோர் கொடிமருங்குலார்
சென்றனரவ்வுழிச் செய்யவாயினார்.

     (இ-ள்.)இந்திரன்-தேவேந்திரன், என்று இயம்ப - என்று இவ்வாறு
சொல்ல, அவன் - அவ்விந்திரனுடைய, துன்றிய பேர் அவை - (தேவர்
முதலியோர்)நெருங்கிய பெரிய சபையில், தோற்றம் மிக்கவர் -
சிறப்புமிகுந்தவர்களும், குன்று இரண்டு எடுப்பது  ஓர் கொடி மருங்குலார்-
இரண்டுமலைகளைத்  தாங்குவதொரு பூங்கொடிபோன்ற
இடையையுடைவர்களும், செய்ய வாயினார்-சிவந்த
வாயையுடையவர்களுமாகிய தெய்வப்பெண்கள், அ உழி - (அருச்சுனன்
தவஞ்செய்கின்ற)அந்த இடத்துக்கு, சென்றனர்-புறப்பட்டுப் போவாராயினர்;
(எ-று.)

      என்றுகொண்டு என்பதில், கொண்டு - அசை: "என்று
கொண்டினையகூறி யிணையடி யிறைஞ்சி"எனக் கம்பராமாயணத்திலுங்
காண்க.கொடியையெடுப்பதோர் குன்றன்றிக்கே, குன்றுகளை யெடுப்பதோர்
கொடிஎன ஒருவகைச்சாதுரியந் தோன்றக் கூறினார்.
குன்றிரண்டெடுப்பதோர் கொடி-உருவகவுயர்வுநவிற்சி: இல்பொருளுவமை
என்பர் ஒருசாரார்.  செய்ய - குறிப்புப் பெயரெச்சம்.             (51)

52.-தேவமாதர் மன்மதனைநினைக்கஅவன்
தன்படையுடன் அங்குவருதல்.

காமனைநினைந்தனர் காமராசனும்
மாமலர்வாளியு மதுரசாபமும்
தேமருமலர்க்கையிற் சேர்த்திச்சேனையோடு
ஆமுறைபுகுந்தன னரனுமஞ்சவே.