பக்கம் எண் :

4பாரதம்ஆரணிய பருவம்

     (இ - ள்.) அங்கு - அக்காமிய வனத்தில், இவர் - பாண்டவர்கள்,
புகுந்த பின்னர் - நுழைந்தபின்பு, அங்கியின் புகைஉம் ஆறி - (அங்கங்குத்
தானாகவே பற்றியெரிகிற) காட்டுத்தீயின் புகையும் தணிந்து, பொங்கிய ஓமம்
தீயின் புகையினால்-மிகுதியாயெழுந்த ஓமாக்கினியின் புகையினாலே, முகில்
உண்டாக - மேகங்கள் உண்டாகவும்,-சிங்கம்உம் - சிங்கங்களும், துதிக்கை
மாஉம் - துதிக்கையையுடைய யானைகளும், சேர்ந்து உடன்திரிய-(தமக்குள்
பகைமை நீங்கி) ஒன்றுசேர்ந்து கூடத் திரியவும், சூழல் எங்கண் உம் -
அவ்விடம் முழுவதும், இமகிரி சாரல் போன்று -
இமயமலையின்சாரலையொத்து, அழகு பெற்றது - அழகை அடைந்தது;

     நல்லோர்களுள்ள இடத்தில் அக்கினிபயம் முதலியன ஒழிதலும்,
யாகம் முதலிய வைதிககாரியங்கள் முறைப்படி நிகழ்தலும், காலங்களில்
மழை பெய்தலும், எல்லாப் பிராணிகளுக்கும் பகைமை யொழிதலும்
இயல்பென்பது, நூற்றுணிபு. "நல்லார் ஒருவருளரே லவர் பொருட்டா,
லெல்லார்க்கும் பெய்யு மழை,""மழையுந்தவமிலாரில்வழியில்லை,"
"நிலத்தியல்பு,வானமுரைத்துவிடும்,""அறன்காளையுறைநாடுகார்,
மின்னொற்று மழையுண்டு விளைவுண்டு"என்பவற்றை இங்கே உணர்க.
புகையும் மாறி என்றும் பிரிக்கலாம்.  இமகிரி=ஹிமகிரி: பனிமலை.
'அங்கியும்புகையு மாறிப் பொங்கியவோமத்தீயாற் புகலருமுகிலுண்டாக'
என்றும் பாடம்.                                             (3)

வேறு.

4.-துருபதன் முதலிய சுற்றத்தார் அங்குப் பாண்டவரைக்
கிட்டுதல்.

துருப னுந்திட்டத் துய்மனுஞ் சோமக
நிருப ரானவர் யாவரு நேர்ந்துடன்
விரவு தானை விராடனுஞ் சுற்றமும்
மருவி னாரவ் வனத்திருந் தோரையே.

   (இ- ள்.) துருபன்உம்-துருபத மகாராசனும், திட்டத்துய்மன் உம் - (அவன்
மகனாகிய) திருஷ்டத்யும்நனும், சோமக நிருபர் ஆனவர் யாவர்உம் -
மற்றும் சோமககுலத்திற்பிறந்த அரசர்களெல்லோரும், நேர்ந்து உடன் விரவு
தானை விராடன்உம் - மனமொத்துக் கூடவருகின்ற சேனையையுடைய
விராடராஜனும், சுற்றம்உம் - (இவ்வரசர்களின்) பந்துக்களும், அ வனத்து
இருந்தோரை - அந்தக் காமியவனத்திலிருந்த பாண்டவர்களை, மருவினார் -
அடைந்தார்கள்; (எ - று.)

     துருபன்=த்ருபதன்: இவன் பாண்டவர்களுக்குப் பெண் கொடுத்த
மாமன்: பாஞ்சால தேசத்தரசன்.  திட்டத்துய்மன் - பாண்டவர் மைத்துனன்;
இவ்விருவரும் சோமககுலத்தவ ரென்று அறிக.  நிருபர் - மனிதர்களைக்
காப்பவர்; ந்ரு - மனிதர்.  துருபதன் என்பது துருபன்என விகாரப்பட்டு
வந்தது.  விராடன் - மச்சநாட்டரசன்.