துழாய் மாலைமாதவன்-குளிர்ந்த திருத்துழாய்மாலையையணிந்தவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வருதலும்-,-திண்திறல் அறத்தின் திருமகன்- மிக்கவலிமையையுடைய யமதருமராசனது குமாரனானயுதிஷ்டிரன், இரு கண்உம் இதயம்உம்களிப்ப கண்டு-(தன்) கண்களிரண்டும் மனமும் மகிழ்ச்சியடையுமாறுதரிசித்து, எதிர்கொண்டு,-அண்டர்உம் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி-தேவர்களுங் கண்டுதொழுதற்குஅரிய அப்பெருமானுடைய உபயபாதங்களிலே வணங்கி, ஆங்கு உறும் இடரினை- அங்கே பொருந்திய துன்பத்தை, அவற்கு-அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடம், உரைப்ப-சொல்ல,-(அப்பெருமான்), திருச் செவி சாத்தினான்- (தன்) செவிகளாற்கேட்டருளி, செப்பும்-பதில்கூறலானான்;(எ-று.)-ஸ்ரீக்ருஷ்ணன் சொல்வதை மேற்கவியிற் காண்க. இதுமுதல் இச்சருக்கமுடியும்வரை எழுசீராசிரிய விருத்தங்கள். (645) 15.-நீவிரைவீரும்நெஞ்சிலுள்ளவற்றை ஒளியாது உரைத்தால், இக்கனிதான்தோன்றியஇடத்திற் சேர்ந்திடு மென்று ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல். திண்மையாலுயர்ந்தநீவிரைவிருமித் தீயிடைப்பிறந்த சேயிழையும், உண்மையானெஞ்சினிகழ்ந்தபட்டாங்கீண் டுரைத்திடக் கோட்டின்மீண்டொன்றும், வண்மையாலுயர்ந்தீரென்றுசெம்பவள வாய்மலர்ந்தருளினான் மாயோன், தண்மையார்கருணைத்தராபதிமுதலோர்சாற்றுவார்தம் மனத்தியல்பே. |
(இ - ள்.)'வண்மையால்உயர்ந்தீர் - உதாரகுணத்தால் மேம்பட்டவரே! திண்மையால் - வலிமையினால்,உயர்ந்த-, நீவிர் ஐவிர் உம்-நீங்களைந்துபேரும், தீயிடை பிறந்த இ சேய் இழைஉம்- அக்கினியினின்றுதோன்றிய செம்பொன்னணிகலனையணிந்தஇந்தத் திரௌபதியும், ஈண்டு - இப்போது, நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு உண்மையால் உரைத்திட - நெஞ்சில்தோன்றிய விஷயங்களை உள்ளபடியினாற்சொல்லினால்,கோட்டில் மீண்டு ஒன்றும்-(தான் தோன்றிய மரத்தின்) கிளையிலேமீண்டும் (பறியுண்ட பழம்) சேர்ந்திடும்',என்று-, மாயோன்-ஸ்ரீக்ருஷ்ணன், செம் பவளம், வாய் மலர்ந்தருளினான்- செம்பவழம்போன்ற தன்வாயைத் திறந்துசொன்னான்:(பின்னர்), தண்மைஆர் கருணை- குளிர்ச்சிபொருந்திய அருளையுடைய,தராபதி முதலோர்-தருமன்முதலியோர்,தம் மனத்துஇயல்பு சாற்றுவார் - தம் மனத்திலுள்ள விஷயங்களைக்கூறுபவரானார்;(எ - று.)-தருமன் முதலியோர்கூறுவதை மேலே காண்க. உண்மையாநெஞ்சில் என்று பிரதிபேதம். (646) 16.-தருமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல். வெல்லுகவறமுமெய்ம்மையும்பொறையும் மேகமேனியனும் வெல்லாமற், செல்லுகபாவம்பொய்மொழிகோபம் தெயித்தியர்குலமெனத் தெளிவுற்று, அல்லும்வெம்பகலுமென்மனநிகழு மலகையாமன்னையை |
|