பக்கம் எண் :

408பாரதம்ஆரணிய பருவம்

    எட்டிக்கொட்டை கசப்புச்சுவையையுடையதாதலால்
வெறுக்கப்படுவதாதல்போலப் பிறர்பொருள் வெறுக்கத்தக்கதென்பான்
'பிறர்பொருளெட்டியேயெனவும்'என்றது.  மறலி-உயிரைக்கொள்ளுங்
கடவுள்:அவனாலும்மற்போரில் எதிர்த்து நிற்கமுடியாத உடல் வலிமை
படைத்தவன் வீமனென்க.  இச்செய்யுளின்பொருளைக்கொண்ட
வடமொழிச்சுலோகம்-"மாத்ருவத்பரதாராணி-பரத்ரவ்யாணி லோஷ்டவத் |
ஆத்மவத்ஸர்பூதாநி ய:பஸ்யதி ஸ பண்டித:"
என்பது.  இது,
தருமபுத்திரன்கொள்கையென்று கன்னடபாரதம் கூறும்.  மறலியுமடிய
மோதுமல் எனவும் பாடம்.                               (648)

18.-அருச்சுனன்கூறுதல்.

ஊனமேயானவூனிடையிருக்கு முயிரினைத்துறந்துமொண்பூணா
மானமேபுரப்பதவனிமேலெவர்க்கும் வரிசையுந்தோற்றமுமரபும்
ஞானமேயானதிருவடிவுடையாய் ஞாலமுள்ளளவுநிற்றலினால்
ஈனமேயுயிருக்கியற்கையாதலினாலென்றனன்வீமனுக்கிளையோன்.

     (இ - ள்.)வீமனுக்கு இளையோன்-வீமசேனனுக்குஅடுத்த தம்பியான
அருச்சுனன்,- (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-'ஞானம்ஏஆனதிருவடிவு
உடையாய் - ஞானமயமாகவேயுள்ள திருவடிவத்தையுடையவனே! ஈனம்ஏ
உயிருக்கு இயற்கை ஆதலினால்- இழிவே பிராணனுக்கு
இயற்கையாயிருத்தலாலும், (மானமென்பது), ஞாலம் உள்ள அளவுஉம்
நிற்றலினால்,இவ்வுலகம் உள்ளவரையிலும் அழியாது நிற்பதனாலும்,
ஊனம்ஏ ஆன - அழியுந்தன்மையையுடைய, ஊனிடை - இவ்வுடலுக்குள்,
இருக்கும் - இருக்கின்ற, உயிரினை- பிராணனை,துறந்துஉம் - விட்டாவது,
ஒண் பூண் ஆம் - (ஆன்மாவுக்கு) ஒள்ளிய பூண்போலப் பிரகாசத்தைச்
செய்கின்ற, மானம் ஏ - மானத்தையே, புரப்பது - (அழியாதபடி)
பாதுகாப்பது, அவனிமேல்-இந்தப்பூமியின் மேலே, எவர்க்குஉம்-
எப்படிப்பட்டவர்க்கும், வரிசைஉம் - சிறப்பும், தோற்றம்உம்-
விளக்கத்தையுண்டாக்குவதும், மரபுஉம்-நற்குடிப்பிறப்பையுண்டாக்குவதுமாம்,'
என்றனன்-;(எ - று.)

     பகவானைஞானஸ்வரூபியென்று வேதங்கூறும்.  உலகத்தில்
உயிருக்குப் பிரகிருதிசம்பந்தத்தினால்தாழ்மைநேர்வதுஇயற்கை:ஆதலால்
அத்தாழ்மையையே யடையும்படி மானத்தை விட்டிடாமல், அழியுந்
தன்மையதான இவ்வுடல் போவதாயிருந்தாலும் பாராட்டாமல்
ஒருவனுக்குஆபரணம் போன்று சிறப்பையும் தோற்றத்தையும் மரபையும்
உண்டாக்கவல்ல மானத்தையே பாதுகாக்க வேண்டுமென்பது என் கொள்கை
யென அருச்சுனன் கூறினானென்க. இச்செய்யுளின் பொருளையொட்டிய
வடமொழிச்சுலோகம்-"ப்ராணம்வாபிபரித்யஜ்ய-மாநமரக்ஷேத்ஸதாபுத:|
அநித்யா அத்ருவாப்ராணா:-மாநஸ்த்வாசந்த்ரதாரகம்"என்பது.  இதனைக்
கன்னடபாரதம் வீமன்கொள்கை யென்னும்.  அதில் அருச்சுனன்
கொள்கையாகக் கூறப்பட்டுள்ள வடமொழிச் சுலோகம்-
"நிமந்தரணோத்ஸவாவிப்ரா:-காவோநவத்ருணோத்ஸவா:|பர்த்ராகமோத்
ஸவாநார்ய:-அஹம்க்ருஷ்ண! ரணோத்ஸவ:"என்பது.          (649)