பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்41

கொடிய பேரிகையையுடையவனுமாய், காலம்உம் வசந்தம் ஆக்கி -
காலத்தையும் வசந்தருதுவாகச்செய்துகொண்டு, செவ்விகூர-அழகுமிக,
வந்தனன் - (அருச்சுனனுடன்பொருதற்கு)
வந்தான்;(எ-று.)

     செந்தமிழ் - சுத்தமான தமிழ்.  சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னுந்
தமிழ்நூலை யியற்றித் தமிழ்ப்பாஷையை வளர்த்தவராகிய அகஸ்தியமா
முனிவர் எழுந்தருளியிருக்குமிடமாதல்பற்றி, மலயமலை 'செந்தமிழ்வரை'
எனப்பட்டது. மன்மதனுக்குத் தேர் தென்றலாதலாலும், அது
மலயமலையிலிருந்து வருவதாலும், தென்றல் 'செந்தமிழ்வரைதருதேர்'
எனப்பட்டது.  சித்திரை வைகாசியாகிய இரண்டுமாதங்கள், வசந்தகாலம்
எனப்படும்.  இளந்தென்றற்காற்றும் அந்திப்பொழுதும் பூரணசந்திரனும்
கடலொலியும் முதலியன காமத்தை மூட்டுதற்குக் கருவியாயிருத்தலால்,
இங்ஙனம் கூறியது.  வேனிற்காலத்துக்குரிய தேவதையாகிய வசந்தனை
மன்மதனுக்கு நண்பனென்று நூல்கள் கூறும்.   "தொடையிலஞ்சி
மஞ்சளிளஞ்சோலைபடைவீடு படைமங்கையர் கமுகம்பாளை-யிடுகவரி,
காளாஞ்சிமல்லிகையாங் காரிகையீர் மாரனுக்கு, வாளா மோலைப்பூவுமால்,"
"ஆலைக்கரும்புசிலைஐங்கணை பூநாண் சுரும்பு,
மாலைக்கிளிபுரவிமாருதந்தேர்-வேலை, கடிமுரசங்கங்குல்களிறுகுயில்காளங்,
கொடிமகரந்திங்கள்குடை,""குடைகவித்தநன்கஞ்சங் கோதறுசூதப்பூக்,
கடியுமசோகந்தளவுகாவி - படையெடுத்து, வாங்காச் சமர்விளைக்கு
மாரனுக்கெப் போது மங்கை, நீங்காக் கணையா நினை"என்பவற்றை
இங்கேயறிக.                                            (53)

வேறு.

                  54.-மந்தமாருதம்வீசுதல்.

கந்தனை யளித்த கன்னியோர் பாகங் கலந்தமெய்க்
                               கண்ணுதற்கெதிராய்ச்,
செந்தமி ழுரைத்த குறுமுனி யிருந்த தெய்வமால் வரை
                                  யிடைத்தோன்றி,
இந்துவு மரவு முறவுசெய் முடிமே லிருந்த மந்தா கினி யருவி,
வந்திழி புனலுஞ் சந்தனங் கமழ வந்தது மந்தமா ருதமே.

    (இ-ள்.) கந்தனை-முருகக்கடவுளை, அளித்த-பெற்ற, கன்னி-
பார்வதீதேவி, ஓர் பாகம் கலந்த-தனது வாமபாகத்திலே சேரப்பெற்ற, மெய்-
திருமேனியையுடைய, கண்நுதற்கு-நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமானுக்கு,
எதிர் ஆய்-ஒப்பாக, செந் தமிழ் உரைத்த குறுமுனி இருந்த-செந்தமிழை
வெளியிட்ட குறுகிய முனிவனான அகத்தியர் தங்கியிருந்த, தெய்வம் மால்
வரை இடை - தெய்வத்தன்மையுள்ள பொதியமலையின்நடுவினின்று,
தோன்றி-பிறந்து,-இந்துஉம் அரவுஉம் உறவு செய் முடி மேல் இருந்த
மந்தாகினி அருவி வந்து இழி புனல்உம் சந்தனம் கமழ - சந்திரனும்
(அதற்குப் பகையாகிய) பாம்பும் (பகையற்று) உறவு கொள்ளுதலை
[பொருந்தியிருத்தலை]ச் செய்கின்ற (சிவபெருமானுடைய) சிரசின்மீதிருந்த
கங்காநதியின் அருவியாகவந்து இழிகின்ற நீரும் சந்தனமணம் வீசுமாறு,
மந்தமாருதம் வந்தது-;