பக்கம் எண் :

414பாரதம்ஆரணிய பருவம்

சென்றுஆங்குத்தென்பட்டபொய்கைநீரைப்பருகி இறந்துவீழ்ந்தனர்.
நெடுநேரஞ்சென்றும் தம்பியர்வாராதசோகத்தாலும் தாகத்தாலும் யுதிஷ்டரன்
அங்கு ஒருசந்தனமரத்தடியிற்சாய்ந்து களைப்பின்மிகுதியால்
உயிரொழிந்தவன்போன்றிருந்தான்.  அவ்வேளையில்வேள்வியினின்று
எழுந்தபூதம் வந்து தான் கொல்லவேண்டிய பாண்டவர்
முன்னமேஉயிரின்றியிருத்தலைக்கண்டுசினம்மூண்டு மீண்டுசென்று
தன்னையேவியமுனிவனையேகொன்றிட்டது.  இது இவ்வாறாக,பின்பு
தென்றல்வீசியதால் சிறிது உயிர்வரப்பெற்ற யுதிஷ்டிரன் சென்று
பொய்கைக்கரையில் தம்பிமார் உயிர்நீங்கியிருத்தலைக்கண்டு கவன்று
தானும் பொய்கைநீர் பருகி உயிர்நீக்கத்துணிந்து அங்ஙன்பருகப்போகையில்,
ஓரசரீரி தடுத்து 'என்வினாக்களுக்குவிடையிறுத்துப் பின் நீர்பருகுக'
என்ன, யுதிஷ்டிரனும் அக்கேள்விகளுக்கு விடைதர, மனமுவந்து
அறக்கடவுள் எதிர்தோன்றித் தம்பிமாரை உயிர்ப்பித்து
வேண்டியவரங்களையும்தந்து சென்றானென்றசெய்தியைக் கூறும்.

1.-கடவுள் வணக்கம்.

சேய பங்கயச்சிறுவிர லங்கையிற் றிரட்டிய நறுவெண்ணெய்,
ஆயர்மங்கைய ரிடவிட வமுதுசெய் தாடிய திருக்கூத்தும்,
நேய முங் குறுமுறுவலும் புரிந்துபார்த் தருளியநெடுங்கண்ணும்,
மாய வன்றிரு வடிவமுமழகுமென் மனத்தைவிட் டகலாவே.

     (இ - ள்.)ஆயர் மங்கையர் - இடைக்குலத்தவரான மகளிர், திரட்டிய
நறு வெண்ணெய் - (தயிரைக் கடைந்ததனால்)திரளத் தோன்றிய நறிய
வெண்ணெயை, சேய பங்கயம் சிறு விரல் அம்கையில்-செந்நிறமுள்ள
தாமரையிதழை யொத்த சிறியவிரல்களையுடையஅழகிய கையிலே, இட இட
- வைக்குந்தோறும், அமுது செய்து - உண்டு, ஆடிய-(அம்மகிழ்ச்சிதோன்ற)
ஆடிய, திருக்கூத்தும்-,-(அந்த ஆயமங்கையரை), நேயம்உம் - அன்பையும்,
குறுமுறுவல்உம்-சிறிதே தோன்றுகின்ற புன்சிரிப்பையும், புரிந்து-(வெளியிலே)
காட்டிக்கொண்டு, பார்த்தருளிய-கடாட்சித்தருளின, நெடு கண்உம் - நீண்ட
கண்களும், மாயவன் - விசித்திரசக்தியையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனது,
திருவடிவம்உம் - திருமேனியும், அழகுஉம் - (முடிவில்லாததான) ஓரழகும்,
என் மனத்தை விட்டு-, அகலா - (ஒருபொழுதும்) நீங்கமாட்டா;(எ - று.)

     மாயவன்என்பதை திருக்கூத்துமுதலியவற்றோடும்சேர்க்கலாம்:
மாயவனுடைய திருக்கூத்தும் கண்ணும் வடிவமும் அழகும்
என்மனத்தைவிட்டுஅகலா என்க:எப்போதும் மாயவனுடைய திருக்கூத்து
முதலியவற்றைத்தியானிப்பேன் என்றவாறு.  "எங்ஙனேயோ"என்று
தொடங்கும் திருவாய்மொழிப்பதிகம் இங்கு நினைவுக்குவருகின்றது.

     இதுமுதற் பதினைந்துகவிகள் - முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர்
காய்ச்சீரும், மற்றவை விளச்சீருமாகிவந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                (655)