அருச்சுனனுடைய தவநிலையைச் சோதிக்குமாறு இந்திரனாலேவப்பட்ட தேவமாதருடனே மன்மதன் இளவேனிலையும் துணையாகக்கொண்டு அக்கயிலையில் வந்திருத்தலால், அதற்கு ஏற்பக் காமோத்தீபகப்பொருளான மந்தமாருதமும் வீசலாயிற்றென்க. பார்வதீதேவியின் திருமணத்தில் தேவர் முதலியோர் பலரும் ஒருங்கேதிரண்ட பாரத்தால் வடதிசை தாழ்ந்து தென்திசை யுயர, அதனைச் சரிசெய்தற்கு எம்மோடொத்த அகத்தியனாரே ஏற்றவரென்று சிவபிரானால் அனுப்பப்பெற்ற அகத்தியமுனிவர் சேர்ந்திருந்ததனால், பொதியமலை 'குறுமுனியிருந்ததெய்வமால்வரை' எனப்பட்டது. தென்றல் பொதியமலையிலிருந்து வருவது என்பதும், அம்மலை 'சந்தனாசலம்'என்று பெயர்பெறும்படி சந்தனமரம் மிக்கிருக்கப்பெற்றதனால் அங்குநின்றும் வீசுந் தென்றல் சந்தன மணமுடையதா யிருக்குமென்பதும் இங்குக் கருதத்தக்கன. தென்றலின் சந்தனநறுமணத்தை உயர்வுநவிற்சியணியால், 'மந்தாகினியிழிபுனலும் சந்தனங்கமழ வந்தது'என்றார். இதுமுதற் பதினான்குகவிகள்-ஒன்றுமூன்று ஐந்து ஆறாஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள். 55. - வசந்தகாலமும்இயைதல். வம்பறாமதுரப்பல்லவங்கோதி மாமகரந்தமாகந்தக், கொம்பெலாமிருந்து குயிலினங்கூவக்கொற்றவெஞ் சிலையினான்முன்னம், சம்பரா சுரனைவென்றவீரனைப்பைந் தாமமாமணிமுடிசூட்டி, எம்பிரான்முனிவுக்கஞ்சலென்பதுபோ லியைந்ததுவசந்த காலமுமே. |
(இ-ள்.)வம்பு அறா - வாசனைநீங்காத, மதுரம்-இனிய, பல்லவம்- தளிர்களை, (தமதுவாயலகால்),கோதி -, மாமகரந்தம் மாகந்தம் கொம்பு எலாம் இருந்து- மிக்க மகரந்தத்தையுடைய தேமாமரத்தின் கிளைகள்தோறும் தங்கியிருந்து, குயில் இனம் கூவ-குயிலின்திரள் இன்னிசையைச் செய்யாநிற்க, கொற்றம் வெம் சிலையினால் முன்னம் சம்பராசுரனை வென்ற வீரனை-வெற்றி பொருந்திய கொடிய (தன்)வில்லினால் முன்பு சம்பராசுரனை வென்ற வீரனாகிய மன்மதனை, 'பைந்தாமம் மா மணி முடி சூட்டி - வாடாத மாலையோடு சிறந்த இரத்தினகிரீடத்தைக்கவித்து, எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்-எமது பெருமானாகிய சிவபெருமானுடைய கோபத்திற்கு அஞ்சாமலிருக்க',என்பதுபோல் - என்று சொல்வதுபோல, வசந்தகாலமும்-, இயைந்தது-வந்து கூடியது; 'நான்துணையாக இருக்கிறேன்: இது உன்னுடைய இராச்சியம்; இதனை, குயிலின் இன்னிசையாகிய மங்கள வாத்தியம் ஒலிக்க மணிமுடி சூடி அரசு புரிக'என்று மன்மதனுக்குக் கூறுவதுபோல அந்த மன்மதனுக்குத் தோழனான வசந்தகாலமும் வந்த தென்பதாம், அஞ்சல்- எதிர்மறை வியங்கோள். மகரந்தம்-பூந்தாது. (55) |