பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்451

     (இ-ள்.) முனி குலம் தொழு-(உலகப்பற்றையொழித்த) இருடிகளின்
கூட்டம் வணங்குகின்ற, கடவுள்-தேவதை, யார்-யாவர்? (என்பது வினா:
இதற்குவிடை):- மொய் துழாய் முகுந்தன் - நெருங்கிய
திருத்துழாய்மாலையையணிந்த முகுந்தனாவன்; நனை மணம் கமழ் -
பூவரும்பின் மணம் வீசுகின்ற, குழவினர்க்கு-கூந்தலையுடைய மகளிர்க்க,
இயற்கை அது-இயல்பாய் அடையவேண்டிய அந்தக்குணம், யாது-எது?
(என்பது வினா: விடை):- நாண்-நாணமாகும்: தனம் மிகுந்தவர்க்கு-செல்வம்
மிக்கவர்க்கு, அரண்-பாதுகாவலாவது, ஏது-எது? (என்பது வினா:
இதற்குவிடை):- தகை பெறு - தகுதிபொருந்திய, தானம்-ஈகையாம்: இரு
செவிக்கு-(மனிதனுடைய) இரண்டுசெவிகளுக்கும், இனியது-இனிமையைத்
தருவது, ஏது-எது? (என்பது வினா: இதற்கு விடை):- இளகுதலையர்-முதிராத
மழலைச்சொற்கள் பேசுகின்ற குழந்தைகளின், இன்சொல்-இனிமையான
சொல்லாகும்; (எ-று.)

     'முனிவர்கள் தொழுங் கடவுள் முகுந்தன்' என்றமையால்,
மோக்ஷத்தைப்பெறவிரும்புவோர் அந்தத்திருமாலையே பணிவ ரென்ற
தாயிற்று. முகுந்தன்' என்ற வடசொல்-மோக்ஷலோகத்தைத் தருபவன் என்று
பொருள்படும். இச்செய்யுளின் நான்காம் அடியில், "குழலினிது யாழினிது
என்பதம்மக்கள், மழலைச்சொற்கேளாதவர்" என்ற திருக்குறள், கருதத்தக்கது.
துழாய்=துளஸீ: வடசொல். அரண்-ஸரணம்: வடசொல் திரிபு.          (710)

57.

நிற்பதேதுகொனீடிசையொன்றுமேநிற்குங்
கற்பதேதுகொல்கசடறக்கற்பதேகல்வி
யற்பமாவதேதனைத்தினுமயற்கரத்தேற்றல்
சிற்பமாமிவைசெப்பெனச்செப்பினன்சிறுவன்.

     (இ-ள்.) நிற்பது-நிலைத்துநிற்பது, ஏதுகொல்-எதுவோ? (என்பதுவினா:
இதற்குவிடை):-நீடு இசை ஒன்றுஉம்ஏ-நீண்ட கீர்த்தியொன்றும், நிற்கும் -
நிலைத்துநிற்கும்; கற்பது ஏது கொல்-கற்றுக்கொள்ளவேண்டுவது, எதுவோ?
(என்பதுவினா:இதற்குவிடை):- கசடு அற-குற்றமில்லாமல், கற்பது -
படிக்கவேண்டுவதாகிய, கல்வி-படிப்பேயாகும்; அனைத்தின்உம் -
எல்லாத்தொழிலினுள்ளும், அற்பம் ஆவது - (ஒருவனுக்குச்
சிறுமையுண்டாக்குவது, ஏது-எது? (என்பது வினா: இதற்குவிடை):- அயல்
கரத்து-பிறருடைய கையிலருந்து, ஏற்றல்-(ஒருபொருளை) யாசித்துப்பெறுதலாம்;
சிற்பம் ஆம் இவை - அருமையாகிய இக்கேள்விகளுக்கு, செப்பு-விடை
யளிப்பாய், என-என்று (யமதருமன்) வினாவ, -சிறுவன்-(அந்தயமனது)
புத்திரனாகிய யுதிஷ்டிரனும், செப்பினன்-(உடனுக்குடனே) விடையளித்தான்;
(எ-று.)

     ஐம்பத்தைந்தாம்பாடல்முதல் இந்தப்பாடல்வரையில் வினாக்கட்குவிடை
உடனுக்குடனே வந்திருத்தலைக்காண்க. "ஒன்றாவுலகத்துயர்ந்தபுகழல்லால்,
பொன்றதுநிற்பதொன்றில்" என்ற குறளால், புகழென்பதொன்றுமே பூமியில்
எப்போதும் அழியாதுநிற்பதாதலையறிக. கல்விக்குக்கசடுஆவது -
ஐயந்திரிப்புகளையுடையதாதல்: ஐயமாவது - சந்தேகவுணர்வு: திரிபுஆவது -
ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் மாறுபாடான உணர்வு.             (711)