பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்5

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.

5.- மற்றும் அன்புள்ளவர்களும் கற்ற அறிஞரும் அங்கே
வந்துமொய்த்தல்.

மற்றுமற்று மகீபரிலன்பினான்
உற்றவுற்ற வுறவுடையோர்களும்
கற்றகற்ற கலைவிதமாக்களும்
சுற்றுமொய்த்தனர் தோமறுகேண்மையார்.

     (இ-ள்.) தோம் அறு கேண்மையார் - குற்றமற்ற நட்பையுடையவரான,
மற்றுஉம் மற்றுஉம் மகீபரில் - இன்னும் வேறு வேறு தேசத்தரசர்களில்,
அன்பினால் உற்ற உற்ற - அன்பால் மிகவும் நெருங்கிய, உறவு
உடையோர்கள்உம் - பந்துத்துவமுடையவர்களும், கற்ற கற்ற கலைவிதம்
மாக்கள்உம்-மிகுதியாய்க்கற்ற நூல்களின் வகைகளையுடைய மனிதர்களும்,
சுற்றுஉம் மொய்த்தனர்-(பாண்டவர்களுக்குச்) சுற்றிலும் நெருங்கினார்கள்;
(எ- று.)

     அடுக்குக்கள் - மிகுதிப்பொருளன.  மற்று என்னும் இடைச்சொல்,
பிறிது என்னும் பொருளது.  கேண்மை-க்ஷேமசமாசாரங்களைக் கேட்பது
(விசாரிப்பது) என்னும் பொருள்பற்றி, நட்பையுணர்த்திற்று.  மகீபர்-பூமியைக்
காப்பவர்; மஹீ-பூமி.   இயல்பாக நிற்கும் மாக்களென்னுஞ்சொல்,
அறிவில்லாத மனிதரை உணர்த்தும்: மாக்களெனப்படுவார்,
மனவுணர்ச்சியின்றிஐம்பொறியுணர்ச்சி மாத்திரமே யுடையவர்: மக்களெனப்
படுவார், ஐம்பொறியுணர்வோடு மனவறிவும் உடையவர்: இவ்வேறுபாடு
"மாவுமாக்களுமையறிவினவே,""மக்கடாமேயாறறிவுயிரே"என்னும்
தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களைக்கொண்டு அறிக.          (5)

6.-ஸ்ரீ க்ருஷ்ணபகவான் வருதல்.

மாதவத்தின் பயனெனமாதவன்
யாதவக்குலத் தேறிமையோர்பதி
ஆதவத்துக் கருநிழல்போலருள்
வேதவித்தக வீரனுமேவினான்.

     (இ - ள்.) மா தவன் - இலக்குமிக்குக் கணவனும், யாதவர் குலத்து
ஏறு-யதுசம்பந்தமானகுலத்தில் தோன்றிய ஆண்சிங்கம் போன்றவனும்,
இமையோர் பதி-தேவர்களுக்குத் தலைவனும், ஆதவத்துக்கு அரு நிழல்
போல் அருள்-வெயிலிற்பட்ட வருத்தத்தை ஒழிப்பதற்கு உதவுகின்ற
அருமையான நிழல்போலப் (பலவகைத்துன்பங்களை யொழிப்பதற்குக்)
கருணை செய்கின்ற, வேதம் வித்தகம் வீரன்உம்-வேதங்களின் ஞானத்துக்கு
விஷயமான மகாவீரனுமாகிய கண்ணபிரானும், மாதவத்தின்பயன் என-
(பாண்டவர்கள் செய்த) பெருந்தவத்தின் பயன்போல, மேவினான்-(அங்கு)
வந்தான்; (எ-று.)