னைக்கிட்டி 'நீஇவ்வளவு கடுந்தவம் புரிகின்றாயே; இதற்குக் காரணம் யாது?'என்று வினாவினானென்க. பஞ்சாக்கினிமத்தியில் நின்று தவஞ்செய்பவ னென்பார் 'செந்தழலிடைநின்றோனும்'என்றார். பஞ்சாக்கினிகளாவன - கார்ஹபத்தியம் ஆஹவநீயம் தக்ஷிணாக்கினி என்ற யாகாக்கினிகள்மூன்றும் மூன்றுபக்கங்களிலும், ஒளபாசனாக்கினி ஒரு பக்கத்திலும், சூரியனாகிய சுடர் வானத்திலும் ஆக இவை. கருதியது, கருத்து; கருத்தாப் பொருள்விகுதி புணர்ந்துகெட்டு முதனிலை திரிந்த பெயர். சிந்தைக்குத் திரு-சிவத்தியானத்தாலுண்டாகுஞ் சிறப்பு. மருத்வாந் என்னும் வடமொழிக்கு - தேவர்களையுடையவன் என்றுபொருள். 70. | மாசறுமதியமன்ன வாண்முகமங்கைபாகத்து ஈசன்வந்தெய்துகாறு மித்தவம்புரிவேனென்ன ஆசறுகடவுளோர்க்கு மருமறைதனக்குமெட்டாத் தேசவன்வருமோவென்று சிரித்தனன்றேவர்கோமான். |
(இ-ள்.)'மாசுஅறு - களங்கமில்லாத, மதியம் - பூர்ணசந்திரனை, அன்ன - ஒத்த, வாள் முகம் - பிரகாசமான திருமுகத்தையுடைய, மங்கை - எப்பொழுதும் மங்கைப் பருவத்தையேயுடைய உமாதேவியை, பாகத்து - (தனது)இடப்பாகத்திலே கொண்ட, ஈசன் - பரமசிவன், வந்து எய்து காறுஉம் - வந்துசேர்ந்து பிரதி யக்ஷமாகிறவரையிலும், இ தவம் புரிவேன் - இந்தத்தவத்தை விடாமற்செய்வேன்,'என்ன - என்று (அருச்சுனன்) சொல்ல,-தேவர் கோமான்-தேவர்களுக்கு அரசனான இந்திரன், 'ஆசு அறு கடவுளோர்க்குஉம் - குற்றமில்லாத தேவர்களுக்கும், அரு மறை தனக்குஉம்- (அளவிடுதற்கு)அருமையான வேதங்களுக்கும், எட்டா - (அறிதற்கு)எட்டாத, தேசவன் - ஒளியுருவமான சிவபெருமான், வரும்ஓ- (உனதுதவத்திற்குப்)பிரதியட்சமாவனோ? [ஆகான்],'என்று- என்றுசொல்லி, சிரித்தனன் - நகைத்தான்; (எ-று.) அருச்சுனன், ஒருகிழமுனிவனே தன்னை வினவுவதாகக் கருதி, 'சிவபிரானைப்பிரதியட்சமாகத் தரிசிக்கும் வரையில், நான் இந்தத்தவத்தை விடாது செய்வேன்'என்று தன் உறுதியைக் கூற, விருத்தமுனிவனான அத்தேவேந்திரன் 'தேவர்கட்கும்வேதங்கட்கும் எட்டாத கடவுளாகிய சிவபிரான் சாதாரணமனிதனாகிய உனது ஊனக்கண்ணுக்குப் பிரதியட்சமாகச் சேவைசாதிப்பனோ?'என்றுசொல்லி அவனதுசெயல் வீணே யென்பது தோன்றுமாறு இகழ்ச்சியாகச் சிரித்தனனென்க. மாசு அறுமதியம்- களங்கமில்லாத முகத்துக்கு, இல்பொருளுவமை. ஈசன்-எல்லா ஐசுவரியமுமுடையவன். காறு-அளவு. உறக்கம் பிணி பசி மூப்புத் துன்பம் இல்லாதவர்க ளென்பான், 'ஆசறுகடவுளோர்'என்றான். கடவுள் பெருஞ்சோதிவடிவாக நிற்ப னாதலால், அவனை 'தேசவன்'என்றார். (70) |