71.-அருச்சுனன் தன்செயலைப்பரிகசித்த இந்திரனுக்குத்தன் மனவுறுதி கூறல்.
சிரித்ததேனென்னமீண்டுந் திருமகன்றன்னைநோக்கி வருத்தமேயன்றியிந்த மாதவம்பயனின்றென்றான் உருத்திவனவனைநோக்கி யுயிரிறுமளவுமிந்தக் கருத்துநான்வீடேனென்றான் கடுங்கனலூடுநின்றான். |
(இ-ள்.)சிரித்தது ஏன் என்ன-(முனிவனே! நீ)சிரித்தது எக்காரணத்தால்? என்று (அருச்சுனன்)வினாவ,-(இந்திரன்),மீண்டுஉம்- மறுபடியும், திரு மகன் தன்னை நோக்கி-(தனது)சிறந்த குமாரனான அவ்வருச்சுனனைக் குறித்து, 'இந்தமா தவம்-இப்பெரிய தவம், வருத்தம்ஏ அன்றி-வருத்தந்தருவது மாத்திரமேயல்லாமல், பயன் இன்று-நீ (கருதிய) பயனைத் தருவதாகாது,' என்றான்-என்று சொன்னான்;(சொல்ல),கடு கனல் ஊடு நின்றான்-கொடிய பஞ்சாக்கினிமத்தியிலே நிற்பவனாகிய, இவன் - அருச்சுனன்,-உருத்து-கோபித்து,அவனை நோக்கி-இந்திரனைப்பார்த்து, 'உயிர்இறும் அளவுஉம்-(எனது)உயிர்நீங்கும் மட்டும், இந்த கருத்து நான் வீடேன்-இவ்வெண்ணத்தை யான் விடமாட்டேன்,'என்றான்-என்று சொன்னான்;(எ-று.) வீடேன்=விடேன்;நீட்டல்விகாரம். இங்கே, கோபம்- தன்னையலைத்தல்காரணமாக உண்டாயிற்று. இன்று-எதிர்மறை ஒன்றன்பாற் குறிப்புமுற்று. (71) 72.-இந்திரன்தனது உண்மைவடிவோடு வெளிப்பட்டு அருச்சுனனை அனுக்கிரகித்தல். மைந்தனிம்மாற்றங்கூற மனனுறமகிழ்ந்துதெய்வத் தந்தையும்விருத்தவேடந் தனையொருகணத்தின்மாற்றி இந்திரனாகியமுன்னின் றிப்பெருந்தவத்தால்வந்து பைந்தொடிபாகன்பாசு பதமுனக்குதவுமென்றான். |
(இ-ள்.)மைந்தன் - புத்திரனான அருச்சுனன், இ மாற்றம் கூற- இவ்வார்த்தையைச் சொல்ல, தெய்வம் தந்தைஉம் - தெய்வத்தன்மையையுடைய பிதாவான இந்திரனும், மனன் உற மகிழ்ந்து- மனம் மிகவுஞ் சந்தோஷித்து, விருத்த வேடம் தனை-கிழவுருவத்தை, ஒரு கணத்தில் மாற்றி-ஒருக்ஷணப்பொழுதிலே நீக்கி, இந்திரன் ஆகி-தேவேந்திர வடிவமாய், முன்நின்று-எதிரில் நின்று, (அருச்சுனனைநோக்கி),'இபெரு தவத்தால்-இந்தப் பெரிய தவங்காரணமாக, பைந்தொடி பாகன்-பசுமையான (பொன்னாலாகிய)தொடியென்னுங் கையணியையுடைய உமாதேவியை இடப்பக்கத்திற்கொண்டபரமசிவன், வந்து-எதிர்ப்பட்டுவந்து, பாசுபதம்உனக்கு உதவும்-பாசுபதாஸ்திரத்தை உனக்குக் கொடுப்பான்'என்றான்-என்று சொன்னான்;(எ-று.) |