பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்7

ளிடத்தாயினும்சினேகிதர்களிடத்தாயினும் ஒருசம்பந்தம்பற்றி உண்டாகுங்
காதலென்றும் வேறுபாடு அறிக.                                (7)

8.வந்தவர்களில் ஒருசாரார், திரௌபதியை
இராசசபையிற்கொணர்வித்த துரியோபதனனைச்
சேனையோடு சிதற எற்றுவோமெனல்.

மரபின்வல்லியை மன்னவையேற்றிய
குருகுலேசனைக் கொற்றவெஞ்சேனையோடு
இரியவெற்றுது மிப்பொழுதேயென
உரமுஞ்சீற்றமுந் தோற்றவுரைசெய்வார்.

     (இ - ள்.) 'மரபின் வல்லியை - உயர்குலத்திற்பிறந்த பூங்கொடிபோன்ற
திரௌபதியை, மன் அவை ஏற்றிய - இராசசபையிற் கொணர்வித்த, குருகுல
ஈசனை - குருகுலத்துக்குத் தலைவனான துரியோதனனை, கொற்றம் வெம்
சேனையோடு - வெற்றியையுடைய கொடிய சேனையுடனே, இரிய -
நிலைகெட்டு ஓடிப்போம்படி, இப்பொழுதே - ,எற்றுதும் - (மேற் சென்று)
தாக்குவோம், என - என்று, உரம்உம் சீற்றம்உம் தோற்ற - (தங்கள்)
வலிமையும் கோபமும் வெளித்தோன்றும்படி, உரை செய்வார் -
சொல்வாரானார்கள்; (எ - று.)

     வல்லி - உவமவாகுபெயர்:மேன்மைக்கும் அழகுக்கும் உவமை.
குலேசன் - குணசந்திபெற்ற வடமொழித்தொடர்.  எற்றுதுமென்ற இடத்து
ஏறுதுமென்ற பாடத்துக்கு - அவன் கீழ்ப்படுமாறுவென்று மேலேறுவோம்
என்று பொருள்.  மரபின், இன் - ஏழனுருபு.  குரு என்பவன் சந்திர
குலத்திற் பிறந்த ஓரரசன்; இவனால், அக்குலம் 'குருகுலம்'என்றும், அவர்
நாட்டின் பகுதி 'குருக்ஷேத்ரம்'என்றும், அக்குலத்தவர் 'கௌரவர்'என்றும்
பேர் பெற்றமை காண்க.                                       (8)

9.-வேறுசிலர் துரியோதனன்தம்பிமாரைக்
கொல்வோமெனல்.

தம்பிமாரைத் தனித்தனியேயுயிர்
வெம்பிவீழ விரைந்துவில்வாங்கியின்று
உம்பர்காண வுயிரழிப்போமெனத்
தும்பைசூடக் கருதினர்சொல்லுவார்.

     (இ - ள்.) 'இன்று-இன்றைத்தினமே,விரைந்து-சீக்கிரமாகச் சென்று,
வில் வாங்கி-வில்லை வளைத்து, தம்பிமாரை-(துச்சாசனன் முதலிய
துரியோதனனுடைய) தம்பியர்தொண்ணூற்றொன்பதின்மரையும்,
தனித்தனியே-ஒவ்வொருவனாக, உயிர் வெம்பி வீழ-உயிர் வாடி விழவும்,
உம்பர் காண-தேவர்கள் பார்க்கவும், உயிர் அழிப்போம்-கொல்லுவோம்'
என-என்று, தும்பை சூட கருதினர்-தும்பைப்பூமாலையைத் தரிக்க
நினைத்தவர்களாய், சொல்லுவார்-சொல்லுவாரானார்கள்; (எ - று.)