உவமை கூறினார். புராதந+ஆகமம்=புராதநாகமம்;தீர்க்கசந்தி. புராதனாகம வேத கீதபுராணரூபம் - வடமொழித்தொடர். ஆகமம்-காமிகம்முதல் வாதுளம் ஈறாகச் சிவபிரானால் வெளியிடப்பட்ட இருபத்தெட்டு: இவை சைவசமயத்துக்குச் சிறப்பாயிருத்தலால், வேதத்துக்கு முன்னே கூறினார். இராமனால் வனவாசகாலத்திற் கொல்லப்பட்ட இராக்கதர்களுள் விராதன் முந்தியவனானதால், இவனை முதலாகக் கூறினார். நிசாசரர்- இராத்திரியிற் சஞ்சரிப்பவர்: இராக்கதர்களுக்குப் பகலினும் இரவில் வலிமை அதிகம். நிசாசர+ஈசர்=நிசாசரேசர்;குணசந்திபெற்ற வடமொழித்தொடர் திரிந்து வந்தது; முச்சிகரம்-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. திரிகூடம் என்பதற்குப் பரியாயமாக இவ்வாறு கூறினார். ராக்ஷச ராஜதானியாகிய லங்காநகரி திரிகூடமென்னும் மலையின்மேல் உள்ள தாதலால், 'முச்சிகரத்தின்மேல்இராதவாறு'என்றார். தன் திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவன் என்பது, ராம என்னுஞ்சொல்லுக்குப் பொருள்;சகலசற்குணங்களும் பொருந்தினவனென்பது, கருத்து. விராதன் என்னும் வடசொல்லுக்கு - மிகுதியாய் அபராதஞ் செய்பவனென்று பொருள்;இவன், முன் தும்புரு வென்னும் பெயருள்ள கந்தருவனா யிருந்து குபேரனது சாபத்தாற் பின்பு இராட்சசனாகி வனத்தில் திரிந்து வந்தவன்: இராமலட்சுமணர்கள் சீதையுடனே தண்டகாரணியத்திற் செல்லுகையில், இவ்வரக்கன் வந்து ஜானகியைத் தூக்கிக்கொள்ளக் கண்டு இராமலட்சுமணர் எதிர்க்க, அவன் அவளைவிட்டு இவர்கள் இருவரையுந் தூக்கிக் கொண்டு செல்ல, ராகவவீரர்கள் அவனைத் தோள்களை வெட்டிக்குற்றுயிராக்கி, அவன் தனது பிறப்பை உணர்த்தி வேண்டிக்கொண்டபடி பள்ளம் வெட்டிப் புதைத்துச் சென்றன ரென்பது, கதை. இதுமுதல் மூன்றுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த எழுசீராசிரிய விருத்தங்கள். (92) 93.-இதுவும்அடுத்தகவியும்-தன்னோடு வீண்வழக்காடாமல் அப்பன்றியைக்கொண்டுபோமாறு சிவபிரானை நோக்கி அருச்சுனன் அதட்டிக் கூறுதல். முன்புவிட்டவென்வாளிகேழன்முகம்பிளந்துபினுருவநீ பின்புவிட்டசரஞ்சிரத்திடையுருவுமாறுபிளந்ததால் வன்பொடிப்படிபுகலுகின்றதுவன்மையோதிறல்வின்மையோ என்பெயர்ப்பொறியேவுபாரிதனுடலினீவிடுமேவுபார். |
நான்குகவிகள் - ஒரு தொடர். (இ-ள்.)முன்பு விட்ட-முன்னே எய்த, என் வாளி-எனது அம்பு, கேழல் முகம் பிளந்து-பன்றியின் முகத்தைப் பிளந்து, பின்உருவ- பின் பக்கமாய்த் துளைத்துச்செல்ல, நீ பின்பு விட்ட சரம் - |