பூலோகத்தில் நடக்கும் போர்களைத் தேவர்கள் ஆகாயத்தில் வந்திருந்து பார்ப்பது இயல்பு ஆதலால் 'உம்பர் காண' எனப்பட்டது. இனி, உயிர் உம்பர் காண என இயைத்து - (அவர்களுடைய)உயிர் வீரசுவர்க்கத்தைச் சென்று சேரும்படி என்றும் பொருள் கூறலாம். தும்பைமாலை-போர்செய்பவர் தாம் வெல்வதற்கு அடையாளமாகச் சூடுவது. (9) 10. - சிலர், வஞ்சகச் சூதாடிய சகுனியை மாய்க்க எழுங்கள் என்றுகூறுதல் வஞ்சகச்சுப லன்றருமைந்தனை வெஞ்சமத்தினில் வீழக்கணத்திடைச் செஞ்சரத்தின் வழியுயிர்செல்லவே எஞ்சுவிக் கவெழுமென்றியம்புவார். |
(இ-ள்.)வஞ்சகன் - (சூதாடி)வஞ்சனை செய்தவனாகிய, சுபலன் தரு மைந்தனை-சுபலனென்பவன்பெற்ற புத்திரனான சகுனியை, கணத்திடை- கணப்பொழுதினுள்ளே, வெம் சமத்தினில் வீழ-கொடிய போரில் (உடம்பு) வீழவும், செம் சரத்தின் வழி-செந்நிறமான அம்பு தைத்தவழியே, உயிர் செல்ல-உயிர் நீங்கவும், எஞ்சுவிக்க-நாசமடைவிக்கும்பொருட்டு, எழும்- புறப்படுங்கள், என்று-, இயம்புவார்-சொல்வாரானார்கள்; (எ-று.)
சுபலன் = ஸு பலன்: நல்லவலிமையையுடையவன்: இவன் காந்தார தேசத்தரசன்: திருதராட்டிரன் மனைவியின் தந்தை. பகைவர்களது உதிரந் தோய்ந்திருத்தல் தோன்ற,'செஞ்சரம்'என்றார்; வளைவில்லாத சர மென்றுமாம். எழும்=முன்னிலையேவற்பன்மை. (10) 11. -கர்ணனுடன் பொருவோமென்று சிலர் கூறுதல். சீதவெண்குடை வேந்தர்தந்தேர்விடுஞ் சூதன்மைந்தன் சுயோதனன்றோழனை மாதிரங்களில் வானவர்காணவிப் போதுடற்றுவ மென்னப்புகலுவார். |
(இ-ள்.) சீதம்-குளிர்ச்சியைத் தருகின்ற, வெள்-வெண்மையான, குடை - குடையையுடைய, வேந்தர்தம் - (குருகுலத்து) அரசர்களுக்கு, தேர் விடும் - தேரையோட்டுகின்ற, சூதன் - சாரதியாகிய அதிரதனது, மைந்தன்- குமாரனும், சுயோதனன் தோழனை-துரியோதனனது சினேகிதனுமாகிய கர்ணனை, வானவர் - தேவர்கள், மாதிரங்களில் - (ஆகாயத்தில்) எல்லாத்திக்குகளிலுமிருந்து, காண - பார்க்கும்படி, இ போது - இப்பொழுதே, உடற்றுவம் - போர்செய்வோம், என்ன - என்று, புகலுவார் - சொல்லுவாரானார்கள்; (எ - று.) துரியோதனன் பாண்டவர்களை வருத்துவது தம்பிமார் பலமும் சகுனியின் பலமுங் கர்ணனது பலமுங்கொண்டே யாதலால், |