பக்கம் எண் :

82பாரதம்ஆரணிய பருவம்

     நீர்மழையை விடாது பொழிகின்ற மேகம்-இடைவிடாமல் அம்புமழை
பொழிகின்ற அருச்சுனனுக்கு ஏற்ற உவமையாம்.  அருச்சுனன்எய்த கணை,
சிவவேடன்மேல் விழாது அவனைச்சுற்றிலும் வீழ்ந்து அவனுக்கு ஒரு
வேலியிட்டாற்போ லாயிற்றென்க. விலகி என்பதை-பிறவினைப்பொருளில்
வந்த தன்வினையென்றாயினும், விலக்கி என்பதன்
தொகுத்தல்விகாரமென்றாயினும் உணர்க. வடித்தல்-நெருப்பிற்காய்ச்சி
அடித்துக் கூர்செய்தல். கொண்டல்-நீரைக்கொள்வது எனக் காரணப்பெயர்.
மூலி-மூலமாக உள்ளவன்.  முனை-கூர்வாய்.  மூலவடிவாமென்றும் பாடம்.

     இது முதற் பதின்மூன்றுகவிகள்-பெரும்பாலும் முதலைந்தும்
விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீருமாகிய
எழுசீராசிரிய விருத்தங்கள்.                                   (103)

104.வேணிமுடிவேடன் மிசைவேறு மொருசாயகம் விடுத்த
                        னன்விடுத்தகணைவில்,
நாணியொடுமுன்பினொடுபின்புதொடுகின்ற
                 கணைநடுவணறவெட்டுதலுமே,
கோணிய விளம்பிறை முடித்தவன்வெகுண்டுபல
                   கோல்கள்விடவிந்த்ரகுமரன்,
பாணியுடனேதொடைநடுங்கியயனின்றதொரு
                       பாதவமருங்கணுகினான்.

     (இ-ள்.)வேணி-சடையைக்கொண்ட, முடி-திருமுடியையுடைய,
வேடன்மிசை-சிவவேடன்மேல், வேறுஉம் ஒரு சாயகம் விடுத்தனன்-
வேறொரு அம்பை (அருச்சுனன்)எய்தான்;விடுத்த கணை-விட்ட அம்பு,
வில் நாணியொடு-வில்லினது நாணியினின்றும், முன்பினொடு-வலிமையுடனே,
பின்பு தொடுகின்ற கணை - (சிவபிரான்)பின்பு எய்த அம்பை, நடுவண்
அற-நடுவிலே முறியும்படி, வெட்டுதலும்-பிளந்த அளவில், கோணிய
இளம்பிறை முடித்தவன்-வளைவாகிய இளஞ்சந்திரனை முடியில்தரித்த
சிவவேடன், வெகுண்டு-கோபித்து,பல கோல்கள் விட-பல அம்புகளை எய்ய,
(அதனால்மிகத்தளர்ந்து),இந்த்ர குமரன்-தேவேந்திரனது திருமகனான
அருச்சுனன், பாணியுடனே தொடை நடுங்கி-கைகளும் தொடைகளும்
நடுக்கமுற்று, அயல் நின்றது ஒரு பாதவம் மருங்கு அணுகினான்-
பக்கத்திலே பொருந்தியதொரு மரத்தின் சமீபத்தைச் சேர்ந்தான்;(எ-று.)

     சிவபிரான் தொடுத்த அம்பு நடுவில் முறியும்படி ஓரம்பை அருச்சுனன்
தொடுத்துவிட, சிவவேடன் கோபித்துப் பல அம்புகளை எய்ய, அருச்சுனன்
தளர்ந்து எதிர்நிற்கமுடியாமல் நடுக்கமெடுத்து அருகிலிருந்த ஒரு மரத்தைச்
சார்ந்து நின்றன னென்க.  நாணியொடு என்பதில், ஒடு உருபு-ஐந்தாம்
வேற்றுமையின் நீக்கப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.  நடுவண்-
நடுவாகிய இடம்:அண் - இடப்பொருளுணர்த்தும்விகுதி: அவண், இவண்
என்பவற்றிலுங் காண்க.  ஸாயகம், இந்த்ரகுமரன், பாணி - வடசொற்கள்.
கோணிய-இறந்தகாலப்பெயரெச்சம். நாணியற என்றும்பாடம்.          (104)