பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்9

இவ்வாறு,வந்த அரசர்கள் கூறினார்கள்.  ஆளுகையைக் குடையென்றல்,
கவிமரபு.  கர்ணன் - பாண்டவர்கள் தாயாகிய குந்தி தேவி
கன்னிகையாயிருக்கும்போது தனக்குத் துருவாசமுனிவர் உபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சிக்கும்பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அனுக்கிரகித்ததனால்,
அவளிடம்பிறந்த புத்திரன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி மானத்துக்கு
அஞ்சி ஒரு மிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டுவிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகன் கண்டு எடுத்துத்
திறந்துபார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியாகிய ராதையும் தானுமாக
வசுசேனனென்று பேரிட்டு வளர்த்தான்: இவன் பின்பு துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி, அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.
சுயோதனன்=ஸு யோதநன்: நல்ல வெற்றியைத் தருகிற யுத்தத்தையுடையவன்
என்று பொருள்.  வானவர் - வானுலகத்துள்ளவர்.  போது=பொழுது: மரூஉ.(11)

12.-இதுவும் அடுத்த கவியும் - குளகம்:
அங்ஙனஞ்சொல்லியவரதுசினம்மூண்ட வார்த்தையைக்
கேட்டுஸ்ரீக்ருஷ்ணன் சொல்லலுறுதல்.

உந்தவுந்த வொருவர்க்கொருவர்வாய்
முந்தமுந்த முடுகுசினத்தராய்
அந்தவந்த வவனிபர்யாவரும்
இந்தவிந்த வுரைகளியம்பவே.

     (இ-ள்.) அந்த அந்த அவனிபர் யாவர்உம் - அந்தந்த
அரசர்களெல்லோரும், உந்த உந்த-(பாண்டவர்களுக்கு வந்த
அவமானமானது தங்களைப்பிடித்து) இடைவிடாமல் முன்னே தள்ளுதலால்,
முடுகு சினத்தர் ஆய் - பொங்கியெழுகின்ற கோபத்தையுடையவர்களாய்,
ஒருவர்க்கு ஒருவர் வாய் முந்த முந்த - ஒருத்தரைக்காட்டிலும் ஒருத்தருக்கு
வாய்ச்சொல் மிகவும் முற்பட, இந்த இந்த உரைகள் இயம்ப - இந்த இந்த
(கீழ்க்கூறிய) வார்த்தைகளைச் சொல்ல,-(எ-று.) - "கேட்டிருந்தருள்
கேசவன்.... ....மகீபர்க்குரைசெய்வான்"
என்றுஅடுத்த கவியோடு முடியும்.

     ஒருவர்க்கு - நான்கனுருபு, எல்லைப்பொருளது.  வாய் - அதிலிருந்து
வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்: கருவியாகுபெயரென்றுங் கூறலாம்.
அவனிபர் - பூமியைக்காப்பவர்.  மூன்றாமடியில், அந்த வந்த என்றும்
பிரிக்கலாம்.                                               (12)

13.கேட்டிருந்தருள் கேசவன்வாசவன்
காட்டிருந்தன னென்னக்கவின்பெறுந்
தோட்டிருந்தளி தேனுகர்சோலையின்
மாட்டிருந்த மகீபர்க்குரைசெய்வான்.