பக்கம் எண் :

108பாரதம்விராட பருவம்

சேனை'குருசேனை' எனப்பட்டது.  'முன்னிட்ட குருசேனை பின்னிட்டது' -
தொடைமுரண்.  உள் வைகும் என இயையும்.  பேடி - பெண்ணுறுப்பு மிக்கு
ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்; ஆணுறுப்புமிக்குப் பெண்ணுறுப்புக் குறைந்த
நபும்சகம், அலியெனப்படும்; 'பேடு' என்பது, இவ்விருவகைக்கும்
பொதுப்பெயர்.  கொட்புஏறி - மாறுபாடு மிக்கு எனினுமாம்.  பூபாலன் -
பூமியைக்காப்பவன்; வடசொல்.  பெட்பேறுதல் - நான்முன்னே நான்
முன்னேயென்று போர்விருப்பங்கொண்டு புறப்படுதல்; "போரெனிற்புகலும்
புனைகழன்மறவர்" என்றார் பிறரும்.                             (171)

13.-திரிகர்த்தராசன்விராடராசன்மேல் அம்புமழைபொழிதல்.

மெய்க்கொண்டபுண்ணோடுதன்சேனைநில்லாமல்வென்னிட்டபின்
கைக்கொண்டநிரையைக்கடத்திப்பொலம்பொற்கழற்காலினான்
செய்க்கொண்டகழுநீரலங்கற்கரந்தைத்திருத்தாமன்மேன்
மைக்கொண்டலெனவில்வளைத்தாறுபத்தம்புமழைசிந்தினான்.

      (இ -ள்.) பொலம் பொன் கழல் காலினான் - அழகிய பொன்மயமான
வீரக்கழலைத் தரித்த காலையுடையவனான திரிகர்த்தன்,-தன்சேனை-, மெய்
கொண்ட புண்ணோடு - உடம்புமுழுவதும் ஆயுதம்பட்ட விரணத்துடனே,
நில்லாமல் - எதிர்நிற்கமாட்டாமல், வென்இட்டபின் - முதுகு கொடுத்து
ஓடியபின்பு, - கைக்கொண்ட நிரையை - (தான்) கவர்ந்து கொண்ட
பசுக்கூட்டத்தை, கடத்தி - (அப்பாற்) செல்லவிட்டு,-மை கொண்டல் என -
கரியமேகம்போல, வில் வளைத்து-வில்லை வளைத்து (நாணேற்றி),-செய்
கொண்ட கழுநீர் அலங்கல் - வயல்களிலே தோன்றிய செங்கழுநீர்
மலர்களாலாகிய மாலையையும், திரு கரந்தை தாமன்மேல் - அழகிய கரந்தைப்
பூமாலையையுமுடையவனான விராடன்மேல், ஆறு பத்து அம்பு - அறுபது
பாணங்களை, மழை சிந்தினான் - மழைபோலப் பொழிந்தான்; (எ - று.)

     அம்புதொடுத்தற்கு மழைபொழிதலும், வில்லுக்கு இந்திர தனுசும்,
திரிகர்த்தனுக்கு மேகமும் உவமை.  செங்கழுநீர்மாலை - விராடனுக்கு உரிய
அடையாளப்பூமாலை.  கரந்தை - ஓர்செடி; இப்பூமாலை, பகைவர்கவர்ந்து
ஓட்டியநிரையை மீட்பவர் தரிப்பது.  புண்ணோடு - மூன்றனுருபு,
அடைமொழிப்பொருளது.  மைக்கொண்டல் - காளமேகம்.  கொண்டல் -
நீர்கொண்டமேகம்.  ’வயலை 'செய்' என்பது திசைச்சொல்.  கழனிகளிற்
செங்கழுநீர் மலர்கின்ற தென நீர்வளச்சிறப்புக் கூறியவாறாம்.        (172)

14.-விராடன்அம்புசெலுத்தித் திரிகர்த்தனைத் தேர்முதலியன
அழித்தல்.

மாமச்சவுடல்புன்புலான்மாறிவண்காவிமணநாறுமக்
கோமச்சவளநாடனுங்கொற்றவரிவிற்குனித்தைந்துசெந்
தாமச்சரங்கொண்டுதேர்பாகுகொடிவாசிதனுவுந்து ணித்து
ஆமச்சமுறமற்றவன்கோலமார்பத்துமம்பேவினான்.