(இ -ள்.) மா மச்சம் உடல் - பெரிய மீன்களின் உடம்பு, புல்புலால் மாறி- (இயல்பிலே அமைந்த) இழிவான புலால்நாற்றம் நீங்கி, வள் காவி மணம்நாறும் - வளப்பமுள்ள நீலோற்பலமலர்களின் சேர்க்கையால் அவ்வாசனை வீசப்பெற்ற, அ கோ மச்சம் வளம் நாடன்உம்-அந்தச் சிறந்த வளம் மிக்க மச்சதேசத்தின் அரசனாகிய விராடனும்,-கொற்றம் வரி வில் குனித்து-வெற்றியைத் தரவல்ல கட்டமைந்த வில்லை வளைத்து, செம் தாமம் ஐந்து சரம் கொண்டு - (பகைவர் இரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய ஐந்து அம்புகளை எய்து அவற்றால், தேர் பாகு கொடி வாசி தனுஉம் துணித்து-(திரிகர்த்தராஜனுடைய) தேர் சாரதி துவசம் தேர்க் குதிரைகள் வில் என்னும் ஐந்தையும் துண்டுபடுத்தி,-மற்று -பின்னும், ஆம் அச்சம் உற - மிக்க பயம் உண்டாம்படி, அவன் கோலம் மார்பத்துஉம் - அவனது அழகிய மார்பிலும், அம்பு ஏவினான் - வேறு பாணங்களைப் பிரயோகித்தான்; (எ -று.) திரிகர்த்தன் பொழிந்த பாணவர்ஷத்திற்கு மாறாக, விராடன் அம்பெய்து அவனது தேர் முதலியவற்றை யழித்தன னென்க. நீலோற்பலமலர்கள் நிறைந்த வயல்களி லுலாவுகின்ற மீன்கள் அம்மலர்களின் சேர்க்கையால் தமது புலால்நாற்றம் நீங்கி, 'பூவோடுகூடி நாரும் மணம் பெற்றது' என்றாற்போல அம்மலர்களின் மணம் நாறுமென்றது, பிறிதின்குணம்பெறலணி. தாமச்சரம் - வரிசையாய் ஒரு தொடையிலே எய்தசரங்களென்றுமாம்: பாகு=பாகன்: ஆகுபெயர். (173) 15.-திரிகர்த்தன்விராடனைத் தேரிற் கட்டுதல். தனைத்தேரழித்தோனைநிரைகொண்டுபோகின்றதனுவீரனும் துனைத்தேரும்வேறொன்றுமேல்கொண்டு நாலைந்துதொடையேவியே வினைத்தேரும்வயமாவும்வெம்பாகும்விழவெய்துவின்னாணினான் முனைத்தேர்முகத்திற்பிணித்தானவன்சேனைமுகமாறவே. | (இ -ள்.) நிரை கொண்டு போகின்ற - பசுக்களைக் கவர்ந்துகொண்டு போகின்ற, தனு வீரன்உம் - விற்போரில்வல்ல வீரனாகிய திரிகர்த்தனும், துனை வேறு ஒன்று தேரும் மேல்கொண்டு-விரைந்து செல்லுதலையுடைய வேறொருதேரில் ஏறிக்கொண்டு,-(விராடனது) வினை தேர்உம் - போர்த் தொழிலுக்கு உரிய இரதமும், (அத்தேரிற்பூட்டிய), வயம் மாஉம் - வெற்றியையுடைய குதிரைகளும், வெம் பாகுஉம் - கொடிய [வல்லமையுள்ள] சாரதியும், விழ - கீழே விழுந்து அழியும்படி, நால்ஐந்து தொடை ஏவி எய்து - இருபது அம்புகளை வில்லில்தொடுத்துப் பிரயோகித்து,-தனை தேர் அழித்தோனை - (கீழ்த்) தன்னைத் தேரழியும்படி செய்தவனான அவ்விராடராசனை, அவன் சேனை முகம் மாற - அவனதுசேனை முகம்திரும்பும்படி [முதுகுகாட்டும்படி], வில்நாணினால் - வில்லினது நாணியினால், முனை - போர்க்களத்தில், தேர் முகத்தில் - (தனது) தேரின் முன்னிடத்தில் [தேர்க்காலில்], பிணித்தான் - கட்டினான்; (எ - று.) |