முகத்தினில்- யுத்தகளத்தில், எனக்கு நீ செய்த-, பேர்உதவிக்கு - இந்த மகோபகாரத்திற்கு, கைம்மாறு - (யான் செய்யும்) பிரதியுபகாரம், ஒருமுகத்தினும் - ஒருவகையிலும், இல்லை-,' என உரைத்தான் - என்று சொன்னான்; (எ - று.) காலத்திற் செய்த நன்றி ஞாலத்தினும் மிகப்பெரிய தாதலால், நான் எந்த உபகாரஞ் செய்தபோதிலும் நீ செய்த பெரிய உபகாரத்துக்கு ஈடாகாதென்றபடி. பலாயனன் செய்த உபகாரம்-தன்னை மாற்றானிடத்தினின்று விடுவித்து, மாற்றானைத் தன்தேர்க்காலிற்கட்டி அகப்படுத்தியது. வீடுகொள் - தன்னை விடுவித்த என்றுமாம்; (பகைவரைக்) கொல்லுகின்ற என்று உரைப்பாருமுளர். (178) 20.-தாமக்கிரந்திதிரிகர்த்தசேனைக்கதிரைகளைக் கவர்தலும், தந்திரிபாலன் நிரைமீட்டலும். சேவலானெனத்தயித்தியனனையவத்திகத்தர் காவலானையக்கான்மகன்பிணித்தமைகண்டு மாவலான்வயமாப்பதினாயிரம்வௌவக் கோவலானவன் கொண்டகோமீளவுங்கொண்டான். |
(இ -ள்.) (அப்பொழுதும்),-அ கால் மகன் - வாயுபுத்திரனான அவ் வீமசேனன், சேவலான் என - கோழிக்கொடியையுடையவனான முருகக்கடவுள் போல, தயித்தியன் அனைய அ திகத்தர் காவலானை - அசுரனைப்போன்ற அந்தத் திரிகர்த்ததேசத்தார்க்கரசனை, பிணித்தமை-கட்டியதை, கண்டு-, மா வலான் - குதிரைசெலுத்துந்தொழிலில் வல்லவனாகிய (தாமக்கிரந்தியென்னும் பெயர்பூண்ட) நகுலன், வயமா பதினாயிரம் வௌவ - (திரிகர்த்த சேனை யிலுள்ள) வலிய பதினாயிரங்குதிரைகளைக் கவர்ந்துகொள்ள,-கோவலான் - பசுக்களைப் பாதுகாக்குந்தொழிலில் வல்லவனாகிய (தந்திரிபால னென்னும்பெயர் கொண்ட) சகதேவன், அவன் கொண்ட கோ-திரிகர்த்தன் கொண்டுபோன பசுக்களை, மீளவும் கொண்டான் - திருப்பி (ஊருக்கு) ஓட்டினான்; (எ - று.) இதனால் பாண்டவர்நால்வர் விராடனுக்கு உதவியமை கூறியவாறு. இது, இப்படலத்துக்கு உயிர்நிலைச்செய்யுள்;நிரைமீட்டல் கூறுகின்றமையின். உரிமைபற்றி, மாவலான் மாவௌவக் கோவலான் கோக்கொண்டானென்க. பலபராக்கிரமங்களிலும் அழகியவடிவிலும் தேவாமிசமாதலிலும் எளிதிற்பகையழித்தலிலும் வீமனுக்கு முருகக்கடவுளும், அவனால் எளிதில் அழிக்கப்படுதலிலும் நல்லோர்க்குப் பகையாய்க் கொடுந்தொழில் செய்தலிலும் திரிகர்த்தனுக்கு அசுரனும் உவமையாவர். சேவல்-ஆண்பாற்பெயர்; இனி, சேவலான்-மயில்வாகனமுடையவ னென்றுமாம். ஆசிரியர் தொல்காப்பியனார் "மாயிருந்தூவி மயி லலங்கடையே" என்றாராயினும், உரைகாரர் 'செவ்வேளூர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்பது' என்றமை காண்க. முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது உடம்பின் கூறு இரண்டும் மயில்வடிவமும் கோழி |