பக்கம் எண் :

114பாரதம்விராட பருவம்

ராஜனை,தோள் வடம் நெகிழ்ந்து - தோள்களைக்கட்டிய கயிற்றையவிழ்த்து,
தேர்உம் ஒன்று அளித்து - ஒருதேரையுங்கொடுத்தருளி, செல்க என-
'(உயிரோடு) போவாயாக' என்று சொல்லி, விடுத்தான் - விட்டிட்டான்; (எ-று.)

     விராடன் சூரியகுலத்துத்தோன்றியவனாதலால் 'அயோத்திமன்'
எனப்பட்டான்.  பகைவர் பக்கலிலும் அறநெறி தவறாத தருமபுத்திரனது
கருணையும், முனிவர் சொல்லைக் கேட்டு அதன்படியொழுகும் விராடனது
நற்குணமும், இங்கு வெளியாம்.  திரிகர்த்தனை இங்ஙனம் விடுத்தது,
தழிஞ்சியென்னும் புறப்பொருள் துறை; அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச்
செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது.  சிங்கம் - வீரனுக்கு நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களாலும், எளிதிற் பகையழிக்குந்
திறத்தினாலும், தலைமையினாலும் உவமை.  இங்கே 'சிங்கமன்னதிகத்தன்'
என்றது, இகழ்ச்சி; எதிர்மறையிலக்கணை, அன்றி, தோல்வியுற்ற அவனை
'சிங்கமன்னவன்' என்றது - அவனை வென்றவனான வீமனது பல
பராக்கிரமங்களின் மிக்க சிறப்புத் தானேவிளங்கக் கூறியதுமாம்.  அங்கம் -
மதிலுறுப்புக்கள்.                                              (181)

23.-அன்றையிராத்திரிவிராடன் அங்கேயே யிருத்தல்.

போரணிப்படையொடுமவன்போனபின்றனது
தேரணிப்பெருஞ்சேனையைரவிகுலதிலகன்
பேரணிப்படவகுத்துமற்றியாரினும்பெரியோன்
ஈரணிப்படைவருமெனக்கங்குலங்கிருந்தான்.

      (இ -ள்.) அவன் - அத்திரிகர்த்தன், போர் அணி படையொடு உம்-
போர்க்களத்துக்கு அலங்காரமான சேனையுடனே, போனபின்-
போய்விட்டபின்பு, ரவி குல திலகன் - சூரியகுலத்துத் திலகம் போன்றவனாகிய
விராடன், 'மற்று யாரின்உம் பெரியோன் - மற்றையெல்லாரினும்
பெரியவனாகிய துரியோதனனது, ஈர் அணி படை - இரண்டாவது [வேறொரு]
சீர் பெற்ற சேனை, வரும் - இங்குவருதல் கூடும்', என-என்று எண்ணி,-தனது-
தன்னுடைய, தேர் அணி பெருஞ் சேனையை - தேர் முதலியவற்றையுடைய
அழகிய பெரிய சேனையை, பேர் அணி பட வகுத்து - பெரிய (வியூகமாக)
ஒழுங்காக வகைப்படுத்தி, கங்குல்-இராமுழுதும், அங்கு-அங்கேயே [தெற்குப்
பக்கத்தில்], இருந்தான்-தங்கியிருந்தான்; (எ - று.)

     தோல்வியுற்ற சேனையை இங்கே 'போரணிப்படை' என்றது - இகழ்ச்சி;
வீரமின்மை விளக்கிற்று.  ரவிகுலதிலகன்-திலகம் - நெற்றிப்பொட்டு.  அது
நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, தான் பிறந்த சூரியகுலத்துக்குச்
சிறப்புண்டாக்குபவனென்க.  மற்று-இனியென்றுமாம்; அசையுமாம்.
ஈரணிப்படை - வினைத்தொகையாய், (பகைவரைப்) பிளக்கவல்ல சேனையுமாம்;
ஈர்த்தல் - அரிதல், அறுத்தல், பிளத்தல்.  'போரணிப்படை' என்ற தொடர் -
போர் செய்தலைத் தனக்கு அலங்காரமாகக்கொண்ட சேனையென்றும், போர்