பக்கம் எண் :

130பாரதம்விராட பருவம்

சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி, எனை = தொகுத்தல்.  'பேடியும்' என்ற
உம்மை - இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு.  'இப்பதி' என்றது,
மச்சநாட்டிற்கு ராசதானியான விராடநகரத்தை.

      'ஓர்அரிடமான தன்விதியினால்' என்றது - வனவாசகாலத்தில்
அருச்சுனன் தான் பரமசிவனிடத்துப் பாசுபதம்பெற்றபின்பு ஆங்கு வந்து
அழைத்துப்போன தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ்சென்ற பொழுது
அங்குத் தன்னைக்காமித்துத் தன்பக்கல் இரவில் வந்து சேர்ந்த
ஊர்வசியென்னுந் தெய்வமகளைத் தாயென்று கொண்டு தாள்களில் விழுந்து
வணங்கிய வளவில், அவள் மிகவும் மனம்வருந்திக் கோபித்து 'பேடியாவாய்'
என்று சாபங்கொடுத்து, பின்னர் அதனை அறிந்த இந்திராதி தேவர்களின்
வேண்டுகோளினால் தான் வேண்டும்நாளில் அப்பேடிவடிவம் ஓராண்டு
வரும்படி வரமாக மாற்றினமையைக் கருதி.                         (203)

45.-பிருகந்நளை உத்தரனைத் தேற்றிக் கட்டவிழ்த்துவிடுதல்.

யாண்டுசென்றிலதின்னமுமீரிருகடிகை
வேண்டுமாலினியீண்டையவ்விசயனுந்தோன்றும்
மீண்டுபோகலைவிடுவிடுவிரைபரித்தடந்தேர்
தூண்டுநீயெனத்தோளிலத்துவக்கையும்விடுத்தான்.

      (இ -ள்.) யாண்டு சென்றிலது - (அஜ்ஞாதவாசத்துக்கு நியமித்த) ஒரு
வருஷகாலம் (இன்னும் முடியக்) கழிந்ததில்லை; இன்னமும்-, ஈர் இரு கடிகை
வேண்டும் - நான்குநாழிகைப்பொழுது கழியவேண்டும்; இனி-(அந்நான்கு
நாழிகைக்குப்) பின்பு, ஈண்டை - இவ்விடத்தில், அ விசயன்உம் - அந்த
அருச்சுனனும், தோன்றும் - வெளிப்பட்டுத் தோன்றுவான்; நீ-, மீண்டு
போகலை - திரும்பி ஓடிப்போவதை, விடு விடு - விட்டுவிடு; விரை பரி தட
தேர் - வேகமாயோடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரை, தூண்டு - செலுத்து,
என - என்று சொல்லி, தோளில் அ துவக்கைஉம் - தோள்களைத் தேரோடு
அணைத்துக் கட்டிய அக்கட்டையும், விடுத்தான்-அவிழ்த்துவிட்டான்; (எ - று.)

     பிருகந்நளை அருச்சுனன் செய்தியைக்கூறி உத்தரனைச்சமாதானப்படுத்தி
அவனைக்கட்டியிருந்த கட்டவிழ்த்துத் தேரைச்செலுத்துமாறு கூறினளென்க.
கடிகை - அறுபது விநாடி.  இனி, விடுவிடு - (மிகவும் விரைவாகத்) தேரை
ஓட்டு என்றலுமாம்.  துவக்கு-முதனிலைத்தொழிற்பெயர்.  'இன்னம்' என்பது-
ஓர் இடைச்சொல்.  'வேண்டும்' என்பது - ஒருவகை வியங்கோள் வினைமுற்று.
                                                          (204)

46.-உத்தரன் தேறுதல்கொண்டுதேர்செலுத்துதல்.

அறிந்துதாள்விழுந்தெழுந்துபின் னாங்கவனருளால்
செறிந்தமால்பெருஞ்சிறப்பையச் சிறுவனும்பெற்றுப்
பிறிந்தபற்பலபேரணி நால்வகைப்படையும்
முறிந்துபோகவத்தேர்விடு தொழிலினின்மூண்டான்.