பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 137

      எளியவரும் தம் நிலத்து வலியராவராதலால் விராடனைச் சேர்ந்தோர்
வலியநம்மைத் தந்நிலத்து வெல்வரென்று கூறியதை வீடுமன் முதலோர்
உடன்பட்டனராக, துரியோதனன் மனம் பொறாமல் அருகே சாரின் குன்றும்
நீறாம்படி அவ்வளவு சினங்கொண்டன னென்றவாறு.  தனது எண்ணத்திற்கு
மாறாகப் பகைவர் சிறப்பை எடுத்துக்கூறியமை குறித்து, துரியோதனன்
கோபித்து நெஞ்சழன்றான்.  அன்றியும், அஞ்ஞாதவாசகாலத்திற்குள்
பாண்டவரைக் கண்டுபிடித்து மீண்டும் காட்டிற்கே துரத்திவிடவேணுமென்று
தான் கொண்டிருந்த எண்ணம் நிறைவேறாமையும் கோபத்திற்குக் காரணம்.
ஈற்றடி - துரியோதனனது சினமிகுதியைவிளக்கும் கவிக்கூற்று.  இனி, -
'குன்றமாயினும்' என்னும் நான்காம் அடிமுதல் மேலைப்பாட்டின் முடிவளவும்
ஒரு தொடராக்கி, இதனையும் கர்ணன் பேச்சாகக்கொண்டு - சமீபத்தில் நாம்
நெருங்கிப் போர்செய்தால், நமக்கு இலக்காவது மலையேயானாலும் அதுவும்
பொடியாய் விடுமெனக்கூறினனெனக் கொள்வாருமுளர்.  'நினைவிதுவென்றார்'
என்பதற்கு - (எங்களுடைய) எண்ணமும் இதுவே யென்றனரென்றுமாம்.
குன்றமாயினும், உம்மை - உயர்வுசிறப்பு; அது, மலையினது பெருமை வலிமை
அசைக்கலாகாத நிலைமைகளை விளக்கிநின்றது.  போர்செய்து நெருக்கினால்
எத்துணைவல்லோரும் அழிவ ரென்றபடி.

     விதுரன் - விசித்திரவீரியனது மனைவியரிலொருத்தியான
அம்பிகையினாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்துவியாஸ
முனிவரருளாற் பிறந்தவன்; திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும்
தம்பிமுறையாகின்றவனாதலால், துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும்
சிற்றப்பன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும் வல்லவன்;
தத்துவஞானமமைந்தவன்.  இவனை யமதருமராஜனது அமிச மென்றும்,
பரமபாகவதர்களிலொருவனென்றும் நூல்கள் கூறும்.  வீடுமன்-பீஷ்மன் என்ற
வடசொல்லின் சிதைவு; பயங்கரனானவனென்பது பொருள்; அச்சந்தருகின்ற
விரதமுடையவனென்பது கருத்து.  இவன், தன் தந்தைக்கு யோஜநகந்தியை
இரண்டாவது மணஞ் செய்வித்தற்கு அவளை வளர்த்த தந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டு, தான் விவாகஞ்செய்து
கொள்வதில்லையென்றும், மூத்தமகனாதலாற் பட்டத்திற்கு உரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச் செல்வங்களையும் தனக்குச் சிறிய தாயாக
வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பேனென்றும், இங்ஙனம்
ஒழித்தற்கு அரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்னும்
மூவகையாசைகளையும் இளமையிலேயே யொழித்துக் கேட்போர்
அஞ்சும்படியான சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்.

     நாகம் என்ற வடசொல் - நகத்தில் வாழ்வது என்று பொருள்படும்; நகம்
- இடம்விட்டுப் பெயராதது: மலையும், மரமும்.  கொடியவன் நெஞ்சு
அழன்றான் - திணைவழுவமைதி.  'கொடியவன் கொடிய' என்ற இடத்து
மடக்கு என்னுஞ் சொல்லணி காண்க.                            (211)