வலிமையுமாம். வல்விரைந்து - ஒருபொருட்பன்மொழி. வல் - விரைவுப்பொருளுணர்த்தும் இடைச்சொல். கோ - பசு என்ற பொருளில் வடமொழியும், அரசரென்ற பொருளில் தமிழ்மொழியுமாம். குலம் - சிறப்பென்னும் பொருளதாதலை 'குலபர்வதம்' என்ற இடத்துங் காண்க. 'தூநிறத்து' என்றது - இளங்கன்றுடைத்தொறுக்களுக்கு அடைமொழி. பசுக்கள் ஆதியில் திருப்பாற்கடலினின்று தோன்றியமை, யாகம்முதலிய வைதிகச்சடங்குகளுக்கு வேண்டிய பால் முதலியவற்றைப் பசுக்கள் உதவுதல், பசுக்களின் உறுப்புக்களில் தேவர்களதுகலைகளும் முனிவர்களுடைய அமிசங்களும் புண்ணிய தீர்த்தங்களின் பகுதிகளும் அமைந்திருத்தல், பசுக்கள் தரும் பஞ்சகவ்வியங்கள் அனைவர்க்கும் பரிசுத்திகரமாதல், பசுக்களைப் பரிசித்தல் பிரதக்ஷிணம்புரிதல் பாதுகாத்தல் பிறர்க்குக்கொடுத்தல் செய்பவர்க்குத் தீவினை தீர்ந்து நல்வினையுண்டாதல் முதலிய சிறப்புக்கள்பற்றி, பசுக்கூட்டத்துக்கு 'தூநிறத்து' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. தூ- தூய்மை யென்னும் பண்புப்பெயரின் விகாரம். குலம் - கூட்டம் என்று கொண்டு, ஒன்றன்கூட்டம் பலவினீட்டம் என்ற இருவகையைக் கருதி 'கோநிரைக்குலம்' என்றன ரென்றலுமொன்று; ஒவ்வொருவகையிலும் பலபசுக்களென்றவாறாம். 'வல்விரைந்து' என்றதை 'கொண்டுபோம்' என்பதனோடும், 'துரந்து' என்பதனோடும் கூட்டலாம். (214) 56.-துரியோதனனைச் சார்ந்த இடையரதுஒடுக்கமும், உத்தரனைச் சார்ந்த இடையரது மகிழ்ச்சியும். முந்தவான்றொறுமீட்டலு முற்கவர்பொதுவர் வெந்தநெய்யெனவாரவ மடங்கினர்மிகவும் அந்தநெய்யினிற்பாற்றுளி யுகுத்தெனவார்த்தார் வந்தமச்சர்கோமகனொடும் வந்தகோபாலர். |
(இ - ள்.) முந்த - முன்னே, ஆன் தொறு - பசுக்கூட்டத்தை, மீட்டலும்- (பேடி) மீட்டுக் கொண்டுவந்த அளவில்,-(அதனால்),-முன் கவர் பொதுவர் - முன்பு (பசுக்களைக்) கவர்ந்துகொண்டுபோன (துரியோதனனோடுவந்த) இடையர்கள்,-வெந்த நெய் என-நன்றாய்க் காய்ந்த நெய் (ஓசையடங்குதல்) போல, மிகவும் ஆரவம் அடங்கினர் - முற்றும் ஆரவாரமடங்கினார்கள்; வந்த மச்சர்கோ மகனொடுஉம் வந்த கோபாலர்-(நிரை மீட்க) வந்த உத்தரகுமாரனோடு வந்த இடையர்கள்,- அந்த நெய்யினில் - அவ்வாறு நன்றாகக் காய்ந்து கொதிக்கின்ற நெய்யில், பால் துளி உகுத்து என- பாலின்துளியைத் தெறித்தால் (மிக்கஓசை எழுமாறு) போல, (மிகவும்) ஆர்த்தார் - (மகிழ்ச்சியால்) மிகவும் ஆரவாரித்தார்கள்; (எ - று.) பொதுவர் - நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கும் நடுவிடமான காடும் காடு சார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்தில் உள்ளவர்; 'இடை |