பக்கம் எண் :

150பாரதம்விராட பருவம்

     அருச்சுனனெய்த அம்புகளினால், பகைவீரர்களிற் பெரும்பாலார்
உடலுறுப்புக்கள் துணிபடக் கவசம்பிளவுபட இறந்தொழிந்தனர்; இறவாமல்
எஞ்சிநின்ற வீரர்களிற் புண்படாதவ ரெவருமில்லை யென்பதாம்.
இரண்டுகால்களையும் மண்டலாகாரமாக வைத்துக் கொண்டு நிற்கின்ற நிலை,
மண்டலநிலை யெனப்படும்; "இருகால் மண்டலித் திடுதல் மண்டல நிலை"
என்பது, பிங்கலந்தை.  'பிளந்து' என்ற செயவெனெச்சம், காரணப்பொருளது.
கவசம் பிளந்தபின் உடம்பில் அம்புருவுதல் எளிதாதலால், பட்டொழிதலுக்குக்
கவசம் பிளத்தல் காரணமாம்.                                   (226)

68.-அருச்சுனன் துரியோதனதுதேர்க்குதிரைகளையும்
பாகனையும் அழித்து அவனைப்பரிகசித்தல்.

வேகம்வற்றியநதியன விதநடைப்புரவி
பாகவற்றினைத்தலையற மலைந்துபாழ்படுத்தி
மாகவற்றினிற்பொய்த்தசூ தாடியவஞ்ச
நாகவற்றியபுன்மொழி நிருபனைநகைத்தான்.

      (இ -ள்.) (அருச்சுனன்),- வேகம் வற்றிய நதி அன - நீர்ப்பெருக்கில்
வேகம் குறைந்த ஆறு (தணிந்து ஓடுவது) போன்ற [மந்தமான வேகமுள்ள],
நடை விதம் - கதியின் தன்மையையுடைய, புரவி - குதிரைகளும், பாகு -
சாரதியும், அவற்றினை - ஆகிய அவைகளை, தலை அற - தலை துணிபடும்படி,
மலைந்து - போர்செய்து, பாழ்படுத்தி - அழியச்செய்து,- மா கவற்றினில் -
பெரிய சூதாடுகருவியால், பொய்த்த சூது ஆடிய - பொய்க்கு இடமான
சூதாட்டத்தை (த் தன்மாமனைக்கொண்டு) ஆடி (த் தருமபுத்திரனை) வென்ற,
வஞ்சம் - வஞ்சனையையுடையவனும், நா கவற்றிய புல் மொழி - நாவினால்
(அப்பாண்டவர்கட்கு) மனவருத்தமுண்டாம்படி கூறிய இழிசொற்களை
யுடையவனுமான, நிருபனை - அத்துரியோதனராசனை நோக்கி, நகைத்தான் -
சிரித்தான்; (எ - று.)

     அருச்சுனன் செய்யும் போர்த்திறத்துக்கு அஞ்சித் துரியோதனன்
குதிரைகள் வலிகுறைந்து நடைதளர்ந்ததனால், அவற்றிற்கு வற்றிய நதி உவமை
கூறப்பட்டது.  இனி, வேக என்று பாடங்கொண்டு - (வெயில்) காய்தலால்
எனினுமாம்.  'பெரும்போர் செய்து அடையவேண்டிய வெற்றியை எளிதில்
அடையச்செய்தலால், 'மா கவறு' எனப்பட்டது; இகழ்ச்சியுமாம்.  புன் மொழி -
திரௌபதியைக் கொணர்ந்து துகிலுரியச் சொன்னது முதலியன.  இங்கு, நகை -
இகழ்ச்சிகாரணமாகப் பிறந்தது.  இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி
காண்க.                                                   (227)

69.-தப்பியோடத்தொடங்கியதுரியோதனனை அருச்சுனன்
மறித்துச் சில கூறத் தொடங்குதல்.

பாகும் வாசியு மமைந்ததோர்தேர்மிசை பாய்ந்து
மாகு சூழவுந் தப்பிய வரிநிறமாபோல்