சொல்லியிரவாதமுன்னே கைம்மாறு கருதாது கொடுக்குமியல்பினது: இதனை உவமைகூறியது, கர்ணனது தானச்சிறப்பை விளக்கும். கன்னன்-கர்ணன் என்ற வடசொல்லின் விகாரம்; இப்பெயர்-கர்ண குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது: காதின்வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம்- காது. (234) 76. கர்ணன் அர்ச்சுனனைப் போர்க்கு அழைத்தல். மின்னுடன்மின்மினி வெகுளுமாறுபோல் தன்னுடனிகரிலாத் தடக்கைவண்மையான் மன்னுடனிகல்வது வார்த்தையன்றினி என்னுடன்மலைதிநீ யென்று கூறினான். |
(இ-ள்.) (அவர்களில்), தன்னுடன் நிகர் இலா - தனக்கு ஒப்புடை பெறாத, தட கை வண்மையான் - பெரிய இரண்டுகைகளாலும் கொடுக்குங் கொடையையுடையவனான கர்ணன், -மின்னுடன் மின்மினி வெகுளும் ஆறு போல் - மின்னலுடனே மின்மினிப்பூச்சி கோபித்துப்பகைத்து (ஒளியாமல்) எதிர்த்தால் அதுபோல, - (அருச்சுனனை நோக்கி), 'நீ-, மன்னுடன் இகல்வது - துரியோதனராசனுடனே எதிர்த்துப் பேசுவது, வார்த்தை அன்று - காரியமன்று; இனி-, என்னுடன் மலைதி - என்னோடு போர்செய்வாய்,' என்று கூறினான் - என்று வீரவாதஞ்சொல்லிப் போர்க்கு அழைத்தான்; மின்னுடன் மின்மினி வெகுளதலாவது-உன்னிலும் நான் மிக்கவொளியுடையே னென்று மாறுபடுதல்; இது, இல்பொருளுவமை. மின்னல்-அருச்சுனனுக்கும், மின்மினி-கர்ணனுக்கும் கவி கூறிய உவமம். இதனால், வீரத்தில் அருச்சுனனது மிக்கவுயர்வும், கர்ணனது மிக்கதாழ்வும் விளங்கும். இனி, 'மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்' என்பதனை, துரியோதனனோடு அருச்சுனன் எதிர்த்ததற்குக் கர்ணன்கூறிய உவமையாகக் கொண்டு உரைப்பாரும்உளர். மின்மினி-இருளில் மின்னுவதொரு பறக்கும் புழு; இடைவிட்டு ஒளிசெய்வதென்று பொருள்படுங் காரணக்குறி. (235) 77. - அருச்சுனன் கர்ணனை நோக்கித் தேர்செலுத்தல். கரக்கவுணமதம்பொழி காய்கறிற்றைவிட்டு உரக்கொடுவரியின்மே லோடும்யாளிபோல் நிரக்குமநதிருபனு நிற்கவந்துபோர் இரக்குமக்கன்னன்மே லிரதமேவினான். |
(இ-ள்.) கரம்-(தன்) துதிக்கையினின்றும், கவுள் - கன்னத்தினின்றும், மதம் பொழி - மதங்களைச் சொரிகின்ற, காய் களிற்றை - கோபிக்குமிய்லபுள்ளதொரு யானையின்மேற் பாய்வதை, விட்டு - ஒழித்து, உரம் கொடுவரியின்மேல் ஓடும் - வலிமையையுடையதொரு புலியின்மேல் ஓடிப்பாய்கின்ற, யாளி போல்-யாளியென்னும் மிருகம் போல, - (அருச்சுனன்), - நிரக்கும் அ நிருபன்உம் நிற்க-பொருந்திய அந்தத் துரியோதனராசனும் நின்று கொண்டிருக்க (அவனைவிட்டு), |