அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் வலிமையில்லாதவர்க்கும் இயலுதலால் 'சொல்லலாம்' என்றும், அவற்றை அவ்வாறு செய்தல் வலிமையுள்ளவர்க்கும் இயலாதுபோதலால் 'விதிக்கும் கூடுமோ' என்றும் கூறப்பட்டன; "சொல்லுதல் யார்க்கு மெளிய அரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்" என்றார் திருவள்ளுவரும். 'விதிக்கும் கூடுமோ' என்றதனால், நினக்குக் கூடாமை பெரியதொன்றன்று என்றபடி. 'பலயானைகள் கூடினாலும் ஒரு சிங்கத்தைக் கொல்லமுடியுமோ?' என்ற உபமானவாக்கியம், 'சாதாரண வீரர் பலர் திரண்டு எதிர்த்தாலும் மகாவீரனான அருச்சுனனொருவனை வெல்ல முடியாது' என்ற உபமேயக்கருத்தைத் தோற்றுவித்ததனால், பின்னிரண்டடி பிறிதுமொழிதலென்னும்அலங்காரம். மல்லல் - மிருகங்கட்கெல்லாம் அரசாயிருக்குந் தலைமையுமாம். (243) 85.-துரோணன்மேலும்வீடுமன்மேலும் அருச்சுனன் அம்புசெலுத்தல். கொழுதுமம்பினுமிகக்கொடியகூற்றிவை பழுதறுநாவினான்பகரும்வேலையின் முழுதுணர்முனியையுமுந்தைதன்னையும் தொழுதுபற்குனன்சிலதொடைகளேவினான். |
(இ -ள்.) பழுது அறு நாவினான்-குற்றமற்ற நாவையுடையவனான அசுவத்தாமன், கொழுதும் அம்பின்உம் மிக கொடிய கூற்று இவை - (உடம்பில்) தைத்து ஊடுருவுகின்ற அம்புகளைக்காட்டிலும் மிகவுங்கொடுமையுடையனவாகிய இப்படிப்பட்ட வார்த்தைகளை, பகரும் வேலையின் - (கர்ணனை நோக்கிச்) சொல்லி யிகழ்கின்ற அப்பொழுதில்,- பற்குனன் - அருச்சுனன்,- முழுது உணர்முனியைஉம் - எல்லாவற்றையும் அறிந்த துரோணாசாரியனையும், முந்தைதன்னைஉம் - பாட்டனான பீஷ்மனையும், தொழுது - வணங்காநின்று, சில தொடைகள் ஏவினான்-சில அம்புகளைப் பிரயோகித்தான்; (எ - று.) 'அசுவத்தாமன் அம்பினும் மிகக்கொடியனவான இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கர்ணனையிகழும்போது, அருச்சுனன் துரோணனையும் பீஷ்மனையும் வணங்கிச் சில அம்புகளையேவினான்' என ஒருவகை முரண்தோன்றுமாறு சமத்காரமாகக் கூறிய நயம் கருதற்பாலது. எய்த அம்பும் கூறிய இழிமொழியும் பிறர் நெஞ்சில் தைத்து அவரை வருத்துதல் தொழிலால் தம்மில் ஒன்றோடொன்று ஒக்குமாயினும், பின்னர் ஆறிப்போம்படியான புண்ணையுண்டாக்குகின்ற வில்லம்பைக்காட்டிலும் எந்நாளும் ஆறாதவடுவை யுண்டாக்குகின்ற சொல்லம்பு மிகவும்கொடிய தாகுதலால், 'கொழுது மம்பினு மிகக்கொடிய கூற்று' எனப்பட்டது; நினைக்கும்போதெல்லாம் வருத்தத்தைத் தருஞ் சொல்லென்க. கொழுதுதல் - துளைத்தல். பழுது - பொய், புறஞ்சொல், கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கில் நிகழும் பாவம்நான்குமென்றுங் கொள்ளலாம்; இவை சொற்குற்றமெனப்படும். இனி, பழுதுஅறு நாவினான் - (அருள்கொண்டு கூறி |