பக்கம் எண் :

164பாரதம்விராட பருவம்

     ஒன்றுந்தெரியாதிருந்த எனக்கு 'இவ்வருச்சுனனல்லாது இவ்வுலகில்
வில்முதலியபடைக்கலங்களின் திறம்படைத்தோர் வேறு இல்லை' என்று
இவ்வுலகத்தார் மதிக்கும்படி அப்படைக்கலக் கல்விகளைப்
பழுதறக்கற்பித்துக்கொடுத்தவன் நீ யென்றால், உனக்கு மாறாக நடப்பது
ஐம்பெரும்பாதகங்களிலொன்றாகிய குருத்துரோகமன்றோ என்றன னென்பதாம்.
பஞ்சமகாபாதகங்கள்-கொலை, பொய், களவு, கட்குடித்தல், குருத்துரோகம்
என்பன;  சிறிதுவேறுபடக்கூறுதலு முண்டு.

     'யாதுமொன்று' என்பது, 'யாதொன்றும்' என உம்மை பிரித்துக்
கூட்டப்பட்டது.  இலை - தொகுத்தல்.  இவனலாதிலையென்று இந்த மேதினி
மதிக்குமாறு - "கலையின தகலமும் காட்சிக்கின்பமும், சிலையினதகலமும்
வீணைச்செல்வமும், மலையினினகலியமார்பனல்லதிவ், வுலகினிலிலையென
வொருவனாயினான்"  என்பவைமுதலியன காண்க.   தனது பணிவும்
குருபக்தியும்தோன்ற, 'உனக்குப் பிழைப்பது' என்னாது 'உன்பதயுகம்
பிழைப்பது' என்றனன்.  பூர்வத்தில் திருமாலாற் கொல்லப்பட்ட
மதுகைடபரென்னும் அசுரர்களது மேதஸ்ஸினால் [உடற்கொழுப்பினால்]
நனைந்தமைபற்றி, பூமிக்கு 'மேதிநீ' என்று பெயர்:  அவ்வடசொல்,
மேதினியெனவிகாரப்பட்டது:  அது - இங்கு இடவாகுபெயராய்,
அதிலுள்ளாரைக் குறித்தது.                                    (247)

89. மன்னொடுசூழநின்றமாசுணமுயர்த்தகோவை
மின்னொடுமுருமேறென்னவெகுண்டமர்புரிவதல்லால்
நின்னொடுங்கிருபனோடுநின்மகனோடுமுந்தை
தன்னொடும்புரியேன்வெம்போர் தக்கதோசரதம்பாவம்.

      (இ -ள்.) மன்னொடு சூழ நின்ற-(பல) அரசர்களாற் சூழப்பட்டு
நிற்கின்ற, மாசுணம் உயர்த்த கோவை - பாம்புக்கொடியை உயர நாட்டியுள்ள
துரியோதனராசனை, மின்னொடுஉம் உரும் ஏறு என்ன வெகுண்டு -
மின்னலுடனே தோன்றுகின்ற பேரிடிபோலக் கோபித்து, அமர்புரிவது அல்லால்
- (அவனுடன்) போர்செய்தலல்லாமல்,- நின்னொடுஉம் - உன்னுடனும்,
கிருபனோடுஉம் - கிருபாசாரியனுடனும், நின் மகனோடுஉம் - உனது
குமாரனாகிய அசுவத்தாமனுடனும், முந்தைதன்னொடுஉம் - பாட்டனாகிய
பீஷ்மருடனும், வெம்போர்புரியேன் - கொடிய யுத்தத்தைச் செய்யமாட்டேன்;
தக்கதுஓ - (உங்களுடன் யான் போர்செய்வது) தகுதியுடையதாகுமோ?
[ஆகாது]:  சரதம் பாவம் - (அது) நிச்சயமாகப் பாவமேயாகும்; (எ - று.)

     துரோணனும் கிருபனும் ஆசிரியர்களாதலாலும், அசுவத்தாமா
ஆசாரியபுத்திர னாதலாலும், பீஷ்மன் பிதாமகனாதலாலும், இவர்களோடு போர்
புரியேனென்றான்.  குருவைப்போலவே குருபுத்திரனையும்
நன்குமதிக்கவேண்டுமென்பது நூற்கொள்கையாத லுணர்க.  மன்னொடுஎன்ற
இடத்திலுள்ள 'ஒடு' என்ற மூன்றனுருபு கருத்தாப்பொருளில் வந்தது.
'மாசுணம்' என்ற பெரும்பாம்பின்பெயர், அதன்