பக்கம் எண் :

166பாரதம்விராட பருவம்

     'செஞ்சோற்றுக் கடன்கழித்திடுதல்வேண்டும்' என்றது, துரியோதனன்
எங்களுக்குச் செவ்வையாய் அளித்துவருகின்ற சோற்றுக்குப் பிரதியுபகாரமாக
அவனுக்கு உதவியாய் உங்களுக்குமாறாக நாங்கள் போர் செய்யவேண்டுவது
கடமை யென்றபடி.  பகை - பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  'வேண்டும்'
என்பது, ஒருவகைவியங்கோள்; இங்கு, இன்றியமையாதென்னும் பொருளது.(249)

91.-துரோணனும் அருச்சுனனும்தம்மிற் பொருதல்.

குருவுமக்குருவைத்தப்பாக்குருகுலக்கோவுந்தங்கள்
அருவரைத்தோளினாணியறைதரப்பிறைவில்வாங்கி
கருவுயிர்த்தெழுந்தகாலமழைமுகில்கால்கொண்டென்ன
ஒருவருக்கொருவர்வாளியோரொருகோடியெய்தார்.

      (இ -ள்.) (பின்பு), - குருஉம் - துரோணாசாரியனும், அ குருவை தப்பா
- அந்த ஆசிரியனதுவார்த்தையைத் தவறாத, குரு குலம் கோஉம் -
குருவென்னுஞ் சந்திரகுலத்தரசனது வமிசத்துத் தோன்றிய சிறந்த அரசனாகிய
அருச்சுனனும்,- வில் பிறை வாங்கி - (தம் தமது) வில்லைப்
பிறைச்சந்திரனைப்போல வளைத்து,- தங்கள் அருவரை தோளில் நாணி அறை
தர - தம் தமது அழித்தற்கரிய மலைகள் போலுந் தோள்களிலே வில்லின்
நாண் படும்படி [தோளளவும் நாணியையிழுத்து],- கரு உயிர்த்து எழுந்த காலம்
மழை முகில் கால்கொண்டு என்ன - தன்னுட் கொண்ட நீரைப்
பெய்துகொண்டு வானத்திலெழுந்த கார்காலத்து நீர்கொண்ட (இரண்டு)
காளமேகங்கள் மழைக்கால்களைக் கொண்டாற்போல, வாளி ஓர் ஒரு கோடி
ஒருவருக்கு ஒருவர் எய்தார் - ஒவ்வொரு கோடி அம்புகளைத் தம்மில்
ஒருவரைக் குறித்து ஒருவர் தொடுத்தார்கள்; (எ - று.)

     துரோணனும் அருச்சுனனும் வில்லைவளைத்து நாணியை யிழுத்து
மழைபெய்தாற்போலக் கோடிகோடியம்புகளை ஒருவரைக் குறித்து ஒருவர்
பிரயோகித்தன ரென்பதாம்; உவமையணி.  'போர்புரியேன்' என்று சொன்ன
அருச்சுனன் பிறகு துரோணன் 'வில்லை வளைத்திடுக' என்ற வளவிலே
அவ்வாசிரியனது கட்டளைக்கு இணங்கிப் போர்தொடங்கியமைபற்றி,
'குருவைத்தப்பாக் குருகுலக்கோ' என்றார்.  'குருவைத்தப்பாக்குருகுலக்கோ'
என்ற தொடரில் 'குரு' என்ற ஒரு சொல்லே வெவ்வேறு பொருளில்வந்தது,
சொற்பின்வருநிலையணியாம்.                                  (250)

92.- இருவரும் சிறிதுபொழுதுசமமாகப்பொருதல்.

அதிரதர்தம்மையெண்ணிலணிவிரன்முடக்கவொட்டா
முதிர்சிலைமுனியும்வீரமுனிவிலாமுகனும்விட்ட
கதிர்முனைப்பவனவேகக்கடுங்கொடும்பகழியாவும்
எதிரெதிர்கோத்தவல்லாற்பட்டிலவிருவர்மேலும்.

      (இ -ள்.) அதிரதர்தம்மை எண்ணில் - அதிரதர்களை (அறிவுடையார்)
எண்ணுமிடத்து, அணி விரல் முடக்க ஒட்டா - (தன்னை எண்ணி