அப்பால் இந்திரனாலழைக்கப்பட்டுத் தேவலோகத்துச் சென்றபொழுது இந்திரனிடத்துப் பல அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றும் சிறந்தன னென வுணர்க. தாமரை மலர் மாலை அந்தணர்க்கு உரிய தாதலை, "பைங்கமலத் தண்டெரியற்பட்டர்பிரான்" என்று பெரியார் கூறியதனாலுங் காண்க. இனி, கஞ்சமாலை - தாமரைமணிமாலையுமாம். கஞ்ஜம் என்ற வடசொல் - நீரில் தோன்றுவ தென்று காரணப்பொருள்பெறும்; (கம் - நீர்:) தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்; அதன் மலர்க்கு அல்லது மணிக்கு முதலாகுபெயர். 'அவன்தனோடு' என்றவிடத்து, மூன்றனுருபு ஏழனுருபின்பொருள்பட்டதனால், உருபுமயக்கம். (252) 94.-துரோணன்தோல்வியடைதல். ஏறுதேர்முரியவேதமெழுதியதுவசம்வீழத் தாறுபாய்புரவிநான்குஞ்சாரதிதலையுஞ்சிந்தக் கூறுபோர்நாணியோடுகுனிசிலைதுணியப்பின்னர் ஆறுகோறொடுப்பவெள்கியாரியன்முதுகிட்டானே. |
(இ -ள்.) பின்னர் - பின்பு - (அருச்சுனன்), ஏறு தேர் முரிய - (துரோணன்) ஏறியுள்ள தேர் முறிந்துபோம்படியும், வேதம் எழுதிய துவசம் வீழ - வேதத்தையெழுதிய கொடி துணிபட்டுவிழும்படியும், தாறு பாய் புரவி நான்குஉம் - தாற்றுக்கோல் பாயப்பெற்ற [இருப்பு முட்கோலாற்குத்தி யோட்டப்படுகின்ற] நான்கு குதிரைகளும், சாரதி தலைஉம் - தேர்ப்பாகனது தலையும், சிந்த - துணிபட்டு விழும்படியும், கூறு போர் நாணியோடு - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற போர்த்தொழிலுக்குச் சிறந்த வில்லின்நாணியுடன், குனி சிலை துணிய - வளைந்த வில்லும் ஒடிபடும்படியும், ஆறு கோல் தொடுப்ப - ஆறு அம்புகளை எய்தவளவில்,- ஆரியன் - துரோணாசாரியன், வெள்கி - வெட்கமுற்று, முதுகிட்டான் - புறங்கொடுத்தான்; (எ - று.) அருச்சுனன் ஆறு அம்புகளைத் தொடுத்துத் துரோணனது தேரும் வேதக்கொடியும் குதிரைகளும் சாரதியும் வில்நாணும் வில்லுமென்ற இவற்றை அழித்தமாத்திரத்தில், துரோணன் முன்நிற்கமாட்டாமல் தான் தனது சீடனிடத்தே தோல்வியுறுதலாலாகும் நாணத்துடனே புறங்கொடுத்துப்போயின னென்பதாம். குருவாகிய துரோணனை வெல்லவேண்டுமென்னுங் கருத்தும் முயற்சியும் அருச்சுனனுக்கு இல்லாதிருக்கவும் அக்குருவின் கட்டளைகடவாது அருச்சுனன் காட்டிய போர்த்திறம் அத்துரோணனுக்குத் தோல்வியாய் முடிந்தமைபற்றி, 'ஆரியன் முதுகிட்டான்' என்று அவன் செய்தியாகக் கூறினார். தாறு - இருப்பு முள்ளை நுனியிற்கொண்டகோல்; இதுகொண்டு குத்தியோட்டுதல், அதிவிரைவாகச் செலுத்தற் கென்க. (253) |