இவன் - இந்த அசுவத்தாமன், இந்த வெம் பகழிக்கு எல்லாம் - இத்தன்மையனவான [சாதாரணமான] கொடிய அம்புகளுக்கெல்லாம், ஈடு அறான் - வலிமையழியான்,' என்று எண்ணி - என்று ஆலோசித்து,- சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடுஉம் - பிறைச்சந்திரனைத்தரித்த முடியையுடையவனான பரமசிவன் (முன்பு) கொடுத்தருளிய அம்பை [பாசுபதாஸ்திரத்தை] வில்லிற் கோத்தவளவில்,-(அசுவத்தாமன்), நொந்து - வருந்தி, இனி என் செய்வோம் என்று- "இனிமேல் நாம் யாதுசெய்யக்கடவோம்!" என்று எண்ணி [மேலே ஒன்றுஞ்செய்யமாட்டாமல்], ஊர் புக நோக்கினான் - (தப்பி உயிருடனே தனது) ஊர்க்கு மீண்டுபோக வழிதேடலானான்; (எ - று.) பாசுபதாஸ்திரம் எதிரற்ற தென்ற சிறப்பு இங்குப் புலனாம். குலகிரிகளுளொன்றான மந்தரம் பாற்கடலைக்கலக்கியமைபோல அருச்சுனன் தோள் பகைவர் சேனைக்கடலைக் கலக்கவல்ல தென்பார், 'மந்தரமனைய தோளான்' என்றார். சந்த்ரமௌலி - வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; ஊர்புக நோக்கினான் - அத்தினாபுரியிற் சென்று புகுந்துகொள்ளக்கருதிப் புறங்கொடுத்தோடுவானாயின னென்றபடி. 'சந்திரமவுலி' என்பதி லடங்கியவரலாறு:- சந்திரன் தக்ஷமுனிவனது புத்திரிகளாகிய அசுவினிமுதலிய இருபத்தேழுநக்ஷத்திரங்களையும் மணஞ்செய்து கொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடி வாழ்ந்திருக்க, மற்றை மகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை 'க்ஷயமடைவாயாக' என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக் கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து மீண்டுங்கலைகள் வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தனனென்பதாம். திருப்பாற் கடல் கடைகையில் அதினின்று உண்டான பல பொருள்களுடனே விஷமும் சந்திரனும்தோன்ற, திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல் தணிந்திருத்தற்பொருட்டு உடனே சந்திரனையுங் கொடுக்க, அதனை அப்பெருமான் சிரமேற்கொண்டனனென்றும் கூறப்படும். (255) 97.-கிருபன்முதலியோர் தோற்றலும், சூரியன் உச்சமடைதலும். கிருபனுமவனைக்கண்டுகெட்டனன்கேடிலாத நிருபர்கள்பலருமோதிநேர்பொருதாவிமாய்ந்தார் பொருபடைச்சேனையாவும்புக்குழியாவர்கண்டார் ஒருபரியொற்றையாழித்தேரவனுச்சமானான். |
(இ - ள்.) கிருபன்உம் - கிருபாசாரியனும், அவனை கண்டு கெட்டனன் - அங்ஙனஞ்சிறந்த போர்செய்கின்ற அருச்சுனனைப்பார்த்த மாத்திரத்தில் நிலைகெட்டு முதுகிட்டான்; கேடு இலாத நிருபர்கள் |