பிரதிமைகளையலங்கரித்தற்குப் பலவகைப் பட்டாடைகள் கொணர்ந்துதரும்படி வேண்டின ளாதலால், உத்தரை வண்டற்பாவைக்கு உடுத்துதற்கென்று தூசுகளைக் கவர்ந்தான். 'அம்ருத கிரணன்' என்று ஒருபெயர்பெறும்படி சந்திரனது கிரணங்களெல்லாம் அமிருதமயமானவை யாதலால், 'திங்களமுது' எனப்பட்டது. பொலிவு இழத்தலை விளக்குதற்கு, 'மயிர்கொய்தென்ன' என்று உவமைகூறினார்; மயிர்கொய்தல், அவமானப்படுத்துதற் குறிப்புமாம்: தூசுபறித்தலும் அப்படியே. 'இத்தரையிடங்கொளாமல்' என்றதனால் பகைவர்களின் மிகுதி கூறியவாறாம். (261) 103.-மயங்கி விழுந்தவர்கள் நெடும்பொழுது கழித்துத் தெளிந்தெழுந்து அருச்சுனனது வீரத்தைமெச்சி இரதம் முதலியவற்றிலேறிக்கொண்டு ஊர்க்குத் திரும்புதல். விழுந்தவர்நெடும்போதாகமெய்யுணர்வெய்திமெல்ல அழுந்தியபகழியோடுமரிபடுகவசத்தோடும் எழுந்துதம்மிரதம்யானையிவுளியினேறியேறித் தொழுந்தகுதெய்வமன்னசூரனைத்துதித்துமீண்டார். |
(இ -ள்.) விழுந்தவர் - (அவ்வாறு மோகநாஸ்திரத்தால் மயங்கி) விழுந்துகிடந்த பகைவரனைவரும், நெடும் போது ஆக - வெகுநேரங்கழிந்த பின்பு, மெய் உணர்வு எய்தி - உண்மையான அறிவு உண்டாகப்பெற்று [மயக்கந்தெளிந்து], அழுந்திய பகழியோடுஉம் - (உடம்பில்) தைத்துக்கிடக்கின்ற அம்புகளுடனும், அரிபடு கவசத்தோடுஉம் - பலதுளைகளையடைந்த கவசத்துடனும், மெல்ல எழுந்து - மெதுவாக எழுந்து, தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி - தம் தமது தேர் யானை குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு, தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை - (யாவரும்) வணங்கத் தக்க கடவுளைப் போன்ற மகாவீரனாகிய அருச்சுனனை, துதித்து - மெச்சிக் கொண்டே, மீண்டார் - திரும்பி (த் தமது ஊர்க்கு)ச் சென்றார்கள்; (எ - று.) பிறர்செய்தற்கரிய செயல்களைத் தான் எளிதிற் செய்து முடிக்குந் திறத்திற் கடவுள்போன்றவ னென்பார், 'தொழுந்தகு தெய்வமன்னசூரன்' என்றார். அவனை இவர்கள் துதித்தது, தம்மை, உயிரோடுவிட்ட உபகாரத்தை நோக்கி யென்க. மெய்உணர்வுஎய்தி-உடம்பில் உணர்வு வந்து கூடப்பெற்று என்றுமாம். 'பகழியோடும்', 'கவசத்தோடும்' என்ற இடங்களில், 'ஓடு' என்ற மூன்றனுருபு - அடைமொழிப்பொருளது. அரிபடுதல் - துளைக்கப்படுதல். 'ஏறி ஏறி' என்ற அடுக்கு - பன்மைப்பொருளது. (262) 104.-அருச்சுனன் துரியோதனனை மகுடபங்கஞ்செய்தல். கொடிமதிற்பாகைவேந்தன்கொங்கர்கோன்புரவிக்காலால் வடதிசையரசர்தங்கண்மாமணிமகுடம்போல அடலுடைவிசயனொற்றை யம்பினான்மீண்டுஞ்சென்று படவரவுயர்த்தகோவைப்பண்ணினான்மகுடபங்கம். |
|