முடையதாதலும், 'பேடியைப் பேடியென்று கருதல்' என்றதிலும் - பேடியுருவங்கொண்டவனை இயல்பான பேடியென்று எண்ணாதே [அவன் அருச்சுனனாவன்] என்ற பொருள் தோன்றுதலும் காண்க. கருதல் - எதிர்மறை யொருமையேவல். ஒரு தனி - தன்னந்தனி யென்றவாறுமாம். 'உம்பர்' என்ற மேலிடத்தின்பெயர் - அங்கு உள்ள தேவர்க்கு இடவாகுபெயராம். காண்டவமெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும் உல்லாசமாக வசித்திருக்கையில் ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங்கொண்டு வந்து 'எனக்கு மிகப்பசிக்கின்றது; உணவிடுக' என்று வேண்ட, அவ்விருவரும் 'நீ வேண்டியபடி உணவிடுவோம்' என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு 'இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்க வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கின்ற காண்டவவனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்' என்ன, கிருஷ்ண அர்ச்சுனர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களை யழித்தருளவேண்டு மென்னும் நோக்கத்தால் 'நீ இதனைப் புசி' என்று இசைந்து அளிக்க, உடனே நெருப்புப் பற்றி யெரித்ததென்பதாம். அங்ஙனம் எரிக்கையில், இந்திரன் சினந்து பெய்வித்த பெருமழையைச் சரக்கூடுகட்டித் தடுத்தும், கோபித்துத் தேவர்கூட்டத்துடன் வந்து பொருத இந்திரனைப் புறங்கொடுத்தோடச்செய்தும், அவ்வனத்தினின்று தப்பியோடத்தொடங்கிய பிராணிகளை அம்பெய்து தழலில் விழுத்தியும் பலவாறு உதவி புரிந்ததனால், அருச்சுனன் 'காண்டவமெரித்த காளை' எனப்பட்டான். (279, 280) 122. - விராடன் அதனைமறுத்துப்பேசுதல். கோடியின்கோடியானகுருக்கள்வெஞ்சேனைதன்னை ஓடியென்புதல்வன்றானேயொருதனிப்பொருதுவென்று நீடியநிரையுமீட்டுமீண்டனனென்னநீயப் பேடியைவிறல்கொண்டாடிப்பேசுதிபிரமமூர்த்தீ. |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) (அதுகேட்ட விராடன் கங்கபட்டனைநோக்கி),- பிரமமூர்த்தீ - தவவடிவமுடையவனே! என் புதல்வன் தான்ஏ - எனது புத்திரனே, ஒரு தனி - தன்னந்தனியே [ஒரு துணையுமில்லாமல்], ஓடி - விரைந்து சென்று, பொருது - போர்செய்து, கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை தன்னை - பலகோடிக்கணக்கான குருகுலத்தவரது கொடியசேனையை, வென்று - சயித்து, நீடிய நிரைஉம் மீட்டு - மிகுதியான பசுக்கூட்டங்களையும் திருப்பிக்கொண்டு, மீண்டனன் - திரும்பிவந்தான், என்ன - என்று (யான்) சொல்லவும், நீ -, அ பேடியை - அந்தப்பேடியாகிய பிருகந்நளையை, |