பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 195

127.-அவள்அவ்விரத்தத்தைத் துடைத்தல்.

பல்கியகிளையுந்தேசும்பார்த்திவன்வாழ்வுந்தாங்கள்
அல்கியநகருமின்றேயழியுமென்றஞ்சியேகொல்
நல்கியநேயமேகொனயனநீர்மல்கமல்க
மல்கியகுருதிதன்னைமாற்றினாள்வண்ணமாதே.

      (இ -ள்.) 'பார்த்திவன் - (விராட)ராசனது, பல்கிய கிளைஉம் -
மிகுதியான பந்துவர்க்கமும், தேசுஉம் - ஒளியும், வாழ்வுஉம் - வாழ்க்கையும்,
தாங்கள் அல்கிய நகர்உம் - தாங்கள் (அஜ்ஞாதவாசமாகத்) தங்கியிருந்த
அவ்விராட நகரமும், இன்றுஏ அழியும் - (இக்கங்கபட்டனது இரத்தம் கீழே
சிந்தினால்) இன்றைக்கே அழிந்துபோய்விடும்,' என்று - என்று எண்ணி
அதனால், அஞ்சிஏ கொல் - அச்சங்கொண்டதனாலேயோ? (அன்றி), நல்கிய
நேயம்ஏ கொல் - (தன் கணவனாகிய அத்தருமபுத்திரனிடத்துத் தான்)
வைத்துள்ள அன்பினாலேயோ? வண்ணம் மாது - வண்ணமகளாகிய
திரௌபதி, நயனம் நீர் மல்க மல்க - (தன்) கண்களினின்று நீர் மிகுதியாய்ப்
பெருகப்பெருக, மல்கிய குருதி தன்னை - (கங்கபட்டனது நெற்றியினின்று)
மிகுதியாய் வெளிப்பட்ட இரத்தத்தை, மாற்றினாள் - (கீழே சிந்தவொட்டாமல்)
துடைத்துப் போக்கினாள்; (எ - று.)

     நிரபராதியும் சாந்தமூர்த்தியும் நற்குணநற்செயல்களிற் சிறந்தவனும்
முனிவடிவமாயுள்ளவனுமான தருமபுத்திரனை விராடன் சினந்து
ஊறுபடுத்தியதனால் அவனது நெற்றியினின்று பெருகும் இரத்தம் கீழே
சிந்துமாயின் அத்தீவினைப்பயனால் விராடனும் அவனதுநாடும் சுற்றத்தோடு
அழிதல் கூடுமென்பதையும், தனது மூத்த தமையனான தருமபுத்திரனை
எவரேனும் புண்படுத்திக் குருதி சிந்துவித்தால் அவரை
வேரொடழித்துவிடுவதென்று அருச்சுனன் விரதங்கொண்டுள்ளவ னாதலால்
அவனால் விராடனுக்குப் பேரழிவு நேர்தல் கூடுமென்பதையும் எண்ணித்
திரௌபதி அஞ்சியதனாலும், தன்பிராணநாயகனாகிய  அத்தருமபுத்திரனிடத்து
அவள் தான் கொண்டுள்ள அன்பினாலும், அருகிலிருந்து கண்ணுற்ற
பணிப்பெண்ணாகிய அவள் கண்ணுங் கண்ணீருமாய் விரைந்தோடிவந்து
தருமனது நெற்றியினிரத்தத்தைக் கீழே சிந்தாதபடி தனது ஆடையினால்
துடைத்தன ளென்ற கருத்தை இங்ஙனம் விகற்பவகையாற் கூறினார்.
(அருச்சுனன் இவ்வகைவிரதமுடையனாதல்பற்றி அவனுக்கு ஜிஷ்ணு என்று
ஒருபெயர் வழங்கிய தென்பதை, "மட்டிலாவலி பெற்றுள்ள வானவர்
முதலோரேனும், இட்டமற்றுதிட்டிரப்பேரிறைவனையவமானித்தால், தொட்டவான்
கணையாற் சென்னி துணிப்பதென் றிருக்குஞ் சொல்லாற், சிட்டுணுவென்று
நாமஞ் செய்தனர் தெளிந்தமேலார்" என்ற நல்லாப்பிள்ளை பாரதத்தாலும்
அறிக.  மேல் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் "தன்னை நிகர்கிற்பவரிலாத
தனுவல்லோன், என்னை திருநெற்றியிலிகுத்தவடு வென்றான்,
மின்னையும்வெறுத்தொளிரு மேதகுநிறத்தான், பின்னை