யவனுக்கு நிகழ்பெற்றியுரைசெய்தான்," "உரைத்தபொழுதிப்பொழுதிவ்வூ ரெரிகொளுத்தித், தரைத்தலைவனைத் தலைதடிந்திடுவலென்னா, விரைத்தடவரைப் புயன்வெகுண்டுவிலெடுத்தான், இரைத்துவரு கான்மகனு மெரிவிழிசிவந்தான்," "அனலுமுதுகானகமகன்று நெடுநாள்நம், நினைவுவழுவாம லிவனீழலிலிருந்தோம், சினமிகுதலிற்றவறு செய்தன னெனப்போய், முனிதல் பழுதாகுமென முன்னவன்மொழிந்தான்" என வருஞ் செய்யுள்களிற் கூறும் விஷயமும் நோக்கத்தக்கது.) கிளை - மரத்தைக் கிளைபோல ஒருவனைத் தழுவிநிற்கும் உறவினத்துக்கு உவமவாகுபெயர். அரசனுக்கு ஒளி - 'உறங்குமாயினு மன்னவன்றன்னொளி, கறங்குதெண்டிரைவையகங் காக்குமால்" என்றபடி உறங்காநிற்கவும் தான் உலகங்காக்கின்ற அவனது தெய்வத்தன்மையும், தான் உயிர்வாழுங்காலத்து மிக்குத்தோன்றுதலுடைமையும், புகழுமாம். மல்க மல்க - அடுக்கு, இடைவிடாமை குறிப்பது. (286) 128.-விராடன்கழிவிரக்கங்கொள்ளுதல். கண்ணினீர்மல்கவண்ணக் காரிகைகலையாலந்த வண்ணமாமுனிவன்சோரி மாற்றியகாலையையுற்று எண்ணமுஞ்செயலும்வேறா யென்செய்தோமென்செய்தோமென்று அண்ணலுந்தன்னைநொந்தாங் கருஞ்சினம்பாவியென்றான். |
(இ -ள்.) அந்த வண்ணம் - அவ்வாறு, வண்ணம் காரிகை - வண்ண மகள், கண்ணின் நீர் மல்க - (தன்) கண்களினின்று நீர்பெருக, கலையால் - (தனது) ஆடையினால், மா முனிவன் சோரி - சிறந்த அந்தக் கங்கமுனிவனுடைய இரத்தத்தை, மாற்றிய காலை - துடைத்தபொழுது,- அண்ணல்உம் - பெருமையிற்சிறந்தவனான விராடராசனும், ஐயுற்று - சந்தேகமடைந்து, எண்ணம்உம் செயல்உம் வேறு ஆய் - நினைப்பும் தொழிலும் வேறுபட்டு, 'என் செய்தோம் என் செய்தோம்- (ஆலோசனையில்லாமல்) என்ன தவறான காரியஞ் செய்துவிட்டோம்! என்ன தவறானகாரியஞ்செய்து விட்டோம்!!' என்று - என்று பலதரம் எண்ணி, தன்னை நொந்து - தன்னைத்தானே செறுத்துக்கொண்டு, ஆங்கு - அப்பொழுது, அருஞ் சினம் பாவி என்றான் - 'அடக்குதற்கு அரிய கோபம் கெட்டது' என்று பச்சாத்தாபப்பட்டான்; (எ - று.) கலை -சேலை; இங்கு, முன்தானை. முனிவனது நெற்றியிற் பொசியும் இரத்தத்தை வண்ணமகள் துகிலால் துடைத்ததுஎன்னவென்று விராடன் சங்கைகொண்டான். 'எண்ணமுஞ் செயலும் வேறாய்' என்றது, இவ்வளவு காலமாய்க் கங்கபட்டனிடத்து வைத்திருந்த அன்போடு கூடிய மதிப்பாகிய நினைப்பும் இப்பொழுது கவற்றினாலெறிந்த கடுந்தொழிலும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடைய தன்றாகி யென்றபடி. பாவமென்றும்பாடமுண்டு: 'அருஞ்சினம் பாவி' என்றதை "அழுக்காறென வொருபாவி" என்றாற்போலக் கொள்க. பண்பிற்குப் பண்பியில்லையாயினும் தன்னை |