பக்கம் எண் :

198பாரதம்விராட பருவம்

      செல்வவளச்சிறப்புப்பற்றி, விராடபுரத்துக்குத் தேவேந்திரனது
அமராவதிநகரம் உவமை.  இனிமையையும் மகிழ்ச்சியையும் விளைத்தலில்,
உத்தரன் வருதல் நீர்கொண்டகாளமேகம் வருதல் போலு மென்க.
காளமேகத்தை உவமைகூறியதற்கு ஏற்ப, படைகளாகிய மின்னலும்
வாத்தியமுழக்கமாகிய இடியும் யானைமதமாகிய மழையும் கூறின ரென்னலாம்:
உம்மை - முற்றுப்பொருளது.  பரந்துமின்னுதல் - நெடுந்தூரமளவும்
பிரகாசித்தல்.  அருச்சுனன் தான் வென்ற ஆண்மையை உத்தரனதாக
அனைவரும் கருதும்படி தூது போக்கியமைபற்றி, 'உரந்தரு பேடி' என்றார்.
காளப்புயல் என்பதை உவமையாகுபெயராகக்கொண்டு, காளமேகம்போன்ற
திருமாலினவதாரமாகிய உபேந்திரமூர்த்தி எனப்பொருளுரைத்து, விராடனது
மகனாகிய உத்தரன் வெற்றியோடு விராடபுரத்து வீதியில் வருதற்கு, இந்திரனது
தம்பியாகிய உபேந்திரன் பகைவென்று இந்திரநகரத்துவீதியில் வருதல்
ஒப்புமையென்க.  புரந்தரன் - பகைவரது நகரங்களை அல்லது உடம்புகளை
அழிப்பவன்.                                               (289)

131.-விராடன் எதிர்கொண்டுஉத்தரனைத் தழுவுதல்.

வென்றுமீள்குமரன்றன்னைவீதிகடோறுமாதர்
அன்றெதிர்கொண்டுநன்னீராசனமெடுத்துவாழ்த்தக்
குன்றெறிந்தவனைக்கண்டகுன்றவில்லியைப்போன்முந்தச்
சென்றவன்பிதாவுந்தேர்மேற்சிக்கெனத்தழீஇக்கொண்டானே.

      (இ -ள்.) வென்று மீள் குமரன் தன்னை - பகைவென்று மீண்டு வரு
கின்ற இளமகனாகிய உத்தரனை, வீதிகள் தோறுஉம் - (அவன் செல்லுகின்ற
விராடபுரத்து) வீதிகளிலெல்லாம், மாதர் - (அந்நகரத்து மாளிகைகளிலுள்ள)
மகளிர்கள், அன்று - அப்பொழுது, எதிர் கொண்டு - எதிர்கொண்டு சென்று,
நல் நீராசனம் எடுத்து வாழ்த்த - நல்ல மங்களவாலத்தி யெடுத்துச் சுழற்றி
வாழ்த்தாநிற்க,- அவன் பிதாஉம் - அவனது தந்தையாகிய விராடனும்,- குன்று
எறிந்தவனை - கிரௌஞ்சகிரியை (வேல்கொண்டு) பிளந்திட்ட (தனது
இளையகுமாரனான) சுப்பிரமணியனை, கண்ட - பார்த்த, குன்றம்
வில்லியைபோல் - மகாமேருகிரியை வில்லாகக்கொண்டவனாகிய
சிவபிரானைப்போல, முந்த தேர்மேல் சென்று - விரைவாகத் தேரின்மீது (ஏறி
எதிர்கொண்டு) சென்று, சிக்கென தழீஇக்கொண்டான் - (அவ்வுத்தரனை)
இறுகத் தழுவிக்கொண்டான்; (எ - று.)

     உத்தரனது தந்தையாகிய விராடனுக்கு முருகக்கடவுளின் தந்தையாகிய
சிவபிரானும், வெற்றிபெற்று மீண்ட இளையகுமாரனான உத்தரனுக்கு
அங்ஙனமாகிய முருகக்கடவுளும் ஒப்புமையெனக் காண்க.  நீராஜநம் -
திருஷ்டிதோஷங் கழிதற்பொருட்டுச் சுழற்றுவது:  சுண்ணாம்பு கலந்த
மஞ்சள்நீரை ஒரு தட்டிற்கொண்டு அதன் நடுவிற் கர்ப்பூரமேற்றிவைத்து
அதனை எடுத்து மங்களகரமான மாதர்கள் விசேஷகாலங்களில் ஒருவர்க்குச்
சுழற்றுதல் மரபு.  குன்று